முன்னையோர் தம் நுண்ணறிவானும், உழைப்பானுங் கண்டறிந்த அரும்பொருள் மணிகளையெல்லாம் நமக்கு உதவுமாறு தொகுத்துவைத்த களஞ்சியங்கள் பாட்டுக்களேயாகும். பல்லாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட நம் பெரியோர் என்பு, தோல், நரம்புகளால் யாக்கப்பட்ட உடம்பினையெடுத்து நமக்கெதிரில் வீற்றிருக்க, நாம் அவர்களோடு, அளவளாவியும், அவர்கள் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டும், அறிவும் ஆண்மையும் உடையராய் இன்புற்றிருத்தலினும், பெறுதற்கரிய பேறு யாதுளது? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளின் முன்பு விளங்கியிருந்து பின் மாறுதலுற்று மறைந்துபோன மலை, நிலன், கடல், யாறு முதலியனவெல்லாம் புலவருடைய பாட்டுக்களில் தம் பண்டைய வுருவுடன் விளங்குதலைக் காணுமிடத்து, நமக்குண்டாகு முணர்ச்சியை யாதென்று கூறலாம்? உலகமென்னும் காட்சி மன்றத்தில் உயர்வற வுயர்ந்த ஒருவனால் காலந்தோறும் அமைத்து வைக்கப்படும் எண்ணில் பேதமான பொருள்களையும் அவற்றின் பண்புகளையும், மொழிகளென்னும் வரைவு கோல் கொண்டு, உள்ள மென்னும் கிழியில் ஒழுங்குறத் தீட்டிவைத்த ஓவியராகும் நல்லிசைப் புலவர்கள், அவ்வோவியக் காட்சியில் உறைந்து நிற்குங்கால் உண்டாய உணர்ச்சியே வடிவாக, அன்னவர் நம் செந்நாவினின் றெழுந்த பாட்டுக்களினும் நமக்கின்பம் விளைப்பன யாவையுள? `உருகிப் பெருகி யுளங் குளிரழு முகந்து கொண்டு, பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடல் போன்று பருகுந் தோறும் பருகுந் தோறும் வற்றாத பேரூற்றாய்க் கழிபேரினிமை சுரந்தூட்டுவன பாட்டுக்களேயா மென்க." | "இக்காலத்தே பொருட் பொலிவு சிறிது மின்றி, எதுகை, மோனை யமையச் சொற்களைத் தெற்றிவைப்பதே பாட்டென்று கருதிக்கொண்டிருப்பாரும் உளர். மடக்கும் திரிபுமாகச் சொற்களை அடுக்கி வைத்து, இரண்டொரு போலிப்பாட் டியற்றினாரைப் புலவர் வரிசையிற் சேர்த்தெண்ணுவாறு முளர். அந்தோ! இவற்றுக்கெல்லாம் காரணம் பாட்டின் தன்மை இன்னதென்று அறியாமையே | | |
|
|