பக்கம் எண் :

மொழி97

கொய்தலேனும் பிற காரணமேனும் நிகழத் தலைவிக்கு அக்காவல் நீங்கி மனையகத்தே தங்கும்படி நேர்தலும், அக்காலத்து இரவில் தோழி அவ்விருவரையுங் கூட்ட முயல்வள். இங்ஙனம் நிகழும் களவொழுக்கம் சிறுகச் சிலர் பலர்க்குத் தெரியவந்து நாளடைவில் ஊரில் பேரலராய் எழும்ப, அது காரணத்தாற் பெற்றோர் தலைவியை இற்செறித்துத் தக்கபடி காவற் படுத்துவர். அதனால் தலைமகனைக் காணப்பெறாத ஆற்றாமை தலைவிமாட்டுப் பெருகுதல் கண்டு, தோழி, இனிக் கற்பு நெறிப்பட்ட இவள் இறந்துபடவுங் கூடுமென்று கருதி, இதற்கு வேறு உபாயமொன்றுங் காணாத நிலையில், அவள் தலைவனை யடைந்து `இனி நீர் இவளை உடன்கொண்டு சென்று மணந்துகொள்வதே காரியம்ழு என்று கூறி ஒருவரும் அறியாவகை தலைவியை வெளியேற்றித் தலைமகன்பாற் சேர்ப்பிக்க, அவன் அவளை உடனழைத்துக்கொண்டு, தன்னூர் நோக்கிச் செல்வான்; செல்லுமிடையில், தலைவியின் சுற்றத்தார் அக்களவறிந்து வந்து தலைவனை மேற்செல்லாதவாறு தடுத்தும், அவள் தன் காதல் முழுதும் தலைவன்பாற் சார்த்தி நிற்பது கண்டு `இவள் கற்பு நெறிபட்டாள்ழு என்று அறிந்துகொண்டு அவ்விருவர்க்குந் தீங்கு செய்யாது திரும்பிப் போவர். போகத் தலைவனுடன் மகிழ்ந்து சென்று தலைவி அவனூரடைந்து வாழ்வளென உணர்க."

 -தொல்.-பொருள். ஆராய்ச்சி. மு. இராகவ ஐயங்கார்

     இக்களவொழுக்கம்பற்றிய செய்திகள் கூத்தர் கூத்தியர்களால் வேத்தவையில் அபிநயித்து நடிக்கப்பட்டு வந்தன. "வேத்தியல் அகம் பொதுவியல் புறமென்பாரும் பிறிது கூறுவாரு முளர்" (அடியார்க்கு நல்லார்). அக்காலத்து நாடக வழக்கையும் உலகியல் வழக்கையும் தழுவிச் சொல்லப்பட்டதே தொல்காப்பியத்திற் கூறப்படும் களவியலாகும். "இத்தமிழ் நாடகத் தமிழ் எனப்படும்; கிளவி ஒழுங்குபடக் கோத்துக் கதைபோல வந்து நாடகத்துக் கேற்றலின்" எனக் கூறுவர் தஞ்சைவாணன் கோவை உரைகாரர்.