பக்கம் எண் :

98தமிழகம்

6. கற்பு

     தலைவியை உடன்கொண்டுபோய்த் தலைவன் தன்னூரிலேனும் தலைவியின் சுற்றத்தார் சம்மதித்து வேண்ட, அவளூரிலேனும் அவளை விதிப்படி மணந்துகொண்டு அவ்விருவரும் இல்லிருந்து ஆற்றும் அறவொழுக்கம் கற்பெனப்படும். இங்ஙனம் இல்லிருந்து இல்லறம் நடாத்தி இன்புற்றிருக்கும் நாளில் சில காரணத்தை முன்னிட்டுத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வன். அங்ஙனம் தலைவியை விட்டுப் பிரிதல் அறநூலை ஓதுதற்பொருட்டாவது, நாடுகாத்தற் பொருட்டாவது, மாறுபட்ட இருவேந்தரைச் சந்து செய்தற்பொருட்டாவது, வேந்தர்க்குத் துணையாய்ப் போர்செய்தற்பொருட்டாவது, பொருளீட்டும் பொருட்டாவது, பரத்தையர் பொருட்டாவது நிகழும். "முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை" என்பதால் பெண்மக்களை மரக்கலத்தில் ஏற்றிச் செல்லல் பழையநாள் மரபன்று. ஓதற் பிரிவு மூன்று ஆண்டுகளும் மற்றப் பிரிவுகளெல்லாம் ஓர் ஆண்டுக்குள்ளும் முற்றுப்பெற வேண்டுமென்ப.
     தலைமகன் பிரிந்து செல்லுமிடத்துத் தலைமகள் அவன் பிரிவாற்றாது இரங்குவாள். தலைமகனு மிரங்கி அவளைத் தேற்றி இன்ன இருதுவில் இன்ன திங்களில் யான் மீண்டு வருவேன் என்று கூறிச் சில குறிகளுஞ் செய்துவிட்டுச் செல்வான். தலைமகளும் தலைவன் சொற்பிழையாது இல்லிருந்து இல்லறமாற்றி வருவாள். அவன் குறித்த பருவம் வந்தவிடத்து அவன் பிரிவினை ஆற்றாது வருந்துவாள். தோழி அவள் ஆற்றாமையைக் கண்டு வருந்தித் தலைவன் குறித்த பருவம் அஃதன்றேல் அவன் செய்த குறிகள் வந்தமையான் அவன் வாராநிற்கின்றான் என்றும் பிறவுங் கூறித் தலைவியை ஆற்றுவிப்பாள். தலைவனுந் தான் குறித்துச் சென்ற வினைமுடித்துக் குறித்த பருவம் வரவே மீண்டு வருவான். மீளும் வழியில் தான் செய்த குறிகளெல்லாந் தோன்றும்; அதுபொருட்டுத் தலைவி ஆற்றாளென்று பாகற்குக் கூறித் தேரை விரைவிற் செலுத்தச்