பக்கம் எண் :

மொழி99

செய்து கடுகிவந்து தலைமகளை யெய்தி விருந்தயர்வான். பின்னர் இருவரும் பிரிந்திருந்தவிடத்து நிகழ்ந்த செய்திகளை யெல்லாம் ஒருவருக் கொருவர் சொல்லிக்கொண்டு இன்புறுவர்.
     இங்ஙனம் இல்லறம் நடாத்தித் தலைவனுந் தலைவியும் வெறுக்கு மளவும் காமவின்பந் துய்த்து மக்களைப் பெற்று முதுமை யெய்தியபோது துறவு மேற்கொண்டு மெய்யுணர்ந்து வீடுபெறுதலே இவ்வொழுக்கத்தின் முடிந்த பொருளாம்.
"காமஞ் சான்ற கடைக்கோட் காலை
யேமஞ் சான்ற மக்களோடு துவன்றி
யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே."

--தொல். கற். 51

     காதல்வழிச் செல்லு முள்ளமும் இறைவனை நச்சு முள்ளமும் ஒருபான்மைய வாகலின், அன்பின் மாண்பினை விளக்கும் அகப்பகுதி விழுமிதென அறிஞர் உச்சிமேல் வைத்துப் போற்றுவர். இறைவன் பக்குவம் வாய்ந்த நல்லுயிர்களை ஆட்கொள்ளும் முறையினை மாணிக்க வாசக சுவாமிகள் "காமஞ் சான்ற ஞானப் பனுவ" லாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் அகப்பொருள் நூலால் விளக்கியிருத்தல் கருத்தில் ஊன்றத் தக்கது.

7. புறம்

     "அகம்போல் ஒத்த அன்புடையோர் தாமே யன்றி எல்லாராலும் துய்த்து உணரப்படுதலானும், இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் இது புறமாயிற்று.
     இதனை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளாக வகுத்துக் கூறுவர். பிற்காலத்தவர் கரந்தை நொச்சி முதலிய பல திணைகளையுங் காட்டி இதனையே பன்னிரண்டு திணைகளாக