பக்கம் எண் :

100தமிழ் இந்தியா

பிராச்மேனியர் சாத்திர உண்மைகளைத் தம் மனைவியருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. பிறருக்கு மறைக்கப் பட்ட அவ்வுண்மைகளை வெளிப்படுத்தி அவற்றின் தூய்மையைக் கெடுத்துவிடுவார்கள், அல்லது உண்மை அறிவு மிகுந்து தம்மை விட்டுப் பிரிந்துவிடுவர் என அவர்கள் அஞ்சுகின்றனர். நல்ல மனைவியரும், கணவனும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவித்து வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் அடிக்கடி பேசும் பொருள்களுள் மரணம் ஒன்றாகும். பிறப்பைப்போல இறப்பும் வரும் என்று அவர்கள் சாத்திரங் கூறுகின்றது. மனிதனுக்கு நேரும் இன்பதுன்பங்களெல்லாம் கனவுபோன்ற மாயை என்றும், இல்லாவிடின் ஒருபொருள் சிலருக்குத் துன்பத்தையும் வேறு சிலருக்கு இன்பத்தையும் கொடுக்கமுடியா தென்றும், ஒரே பொருள் வெவ்வேறு காலங்களில் நேர் மாறான நுகர்வுகளைக் கொடுக்கக் காரணமென்ன வென்றுங் கூறுகின்றனர்.

  இயற்கை நிகழ்ச்சியைக் குறித்த அளவில் அவர்கள் குறைவான விளக்கமுடையவர்களா யிருக்கின்றனர். அவர்கள் கட்டுக்கதைகளை நம்புகின்றனர்; ஊகை ஆராய்விலும் பார்க்கச் சாதனையில் திறமையுடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் கொள்கைகள் பலவகையில் கிரேக்கர் கொள்கைகளோடு ஒற்றுமையுடையனவாய்க் காணப்படுகின்றன. கிரேக்கரைப்போலவே அவர்களும் உலகம் ஒரு காலத்தில் உற்பத்தியானதென்றும், அது உருண்டைவடிவினதென்றும், அதனை உண்டாக்கிய கடவுள் அதன் எல்லாப் பாகங்களிலும் செறிந்திருக்கிறாரென்றும் கூறுகின்றனர். இவ்வுலகின் உற்பத்திக்கு முதற் காரணமுண்டென்றும், அது நீரினின்று உண்டாயிற்றென்றும், நிலம், தீ, நீர், காற்று என்னும் நாலு பூதங்களை விட ஐந்தாவது பூதம் ஒன்று உண்டென்றும், அதினின்றும்