பக்கம் எண் :

தமிழ் இந்தியா99

அறிவாளிகளின் பாதுகாப்பில் இருக்கின்றனர். தாயினதும் குழந்தையினதும் நலத்துக்காகச் சில கிரியைகளைச் செய்வதாகப் பாசாங்கு செய்து அறிவாளிகள் அவளுக்குப் பல புத்திமதிகளைக் கூறுகின்றனர். அவர்களின் புத்திமதிகளை ஆவலோடு கேட்கின்றவள் மிகவும் புண்ணியசாலி என்று கருதப்படுகின்றாள். பிறந்தபின் குழந்தை, ஒருவரின்பின் ஒருவராக அறிவில் உயர்ந்த பலரின் பாதுகாப்பில் இருந்து வருகிறது.

  தத்துவ சாத்திரிகள், வளைத்தடைத்த சோலைகளின் மத்தியில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை எளிதானது; புல், மான்தோல் முதலியவற்றின் மீது அவர்கள் படுக்கின்றனர். அவர்கள் விலங்குகளின் இறைச்சியைப் புசிப்பதில்லை; பெண் போகத்தை அவர் வெறுப்பர். அவர்கள் பேசுவதைக் கேட்போர் மௌனமாகவும் அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இப் பிரமாணத்தைத் தாண்டும் எவரும் இரக்கமின்றி அக்கூட்டத்தினின்றும் விலக்கப்படுகின்றனர். இவ்வாறு வாழும் ஒவ்வொருவரும் முப்பத்தேழு ஆண்டுகளின்பின் தத்தம் இல்லங்களுக்குச் செல்கின்றனர். அப்பொழுது அவர்கள் அழகிய மசிலின் ஆடைகளை உடுக்கின்றனர்; விரல்களில் ஆழிகளும், காதிற் குண்டலங்களும் அணிகின்றனர்; தொழில் செய்கின்ற விலங்குகளல்லாத பிறவற்றின் ஊனைப் புசிக்கின்றனர். காரமுள்ளதும் தாளிதஞ் செய்ததுமாகிய உணவை அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மனைவியரையும் அவர்கள் மணந்துகொள்ளலாம். அடிமைகளின்மையின் கூடிய தொகை மனைவியர்களையும், பிள்ளைகளையும் உடையராயிருத்தல் தமக்கு வாழ்க்கை வசதியாகு மென அவர்கள் எண்ணுகின்றனர்.