பக்கம் எண் :

தமிழ் இந்தியா101

வானமும் நட்சத்திரங்களும் உண்டாயினவென்றும் அவர்கள் நம்புகின்றனர். பூமி உலகின் மத்தியில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. சிருட்டி உயிரின் இலக்கணம் இவைபோன்ற பல பொருள்கள் கிரேக்கர் கொள்கைகளோடு ஒத்திருக்கின்றன. சார்மேன்களின் ஹைலேபியோய் என்னும் பிரிவினர் மிகவும் மரியாதை காட்டப்படுகின்றனர். அவர்கள் காட்டில் வசித்து அங்குக் கிடைக்கும் இலைகளையும், பழங்களையும் புசிக்கின்றனர்: மரப்பட்டையால் தைத்த உடையையுடுக்கின்றனர். பெண் போகமும், மதுவும், ஊனும் அவர்களுக்கு விலக்கு. அரசன் தூதுவர் மூலம் இவர்களிடம் தனக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கேட்கிறான்; இவர்கள் மூலம் கடவுளுக்கு வழிபாடு செய்விக்கிறான்.

  இவர்களுக்கு அடுத்தபடியி லுள்ளோர் மருத்துவர், இவர்கள் மனிதனின் இயற்கையைப்பற்றிய ஆராய்ச்சி செய்கின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் எளியவை,. அவர்கள் வயல்களில் வசிப்பதில்லை. அவர்களின் உணவு அரிசியும் பிறவும், இவற்றை அவர்கள் எவரிடமேனும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுகின்றனர்; அல்லது விருந்தாளிகளாகத் தங்குமிடங்களிற் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் கலைகளின் சிறப்பினால் மகிழ்ச்சிக்குரிய மணங்களை ஒழுங்குபடுத்துவர்; பிறக்கும் குழந்தைகள் ஆண் அல்லது பெண் என்று முன்அறிந்து கூறுவர். அவர்கள் உணவு முறைகளால் நோயை மாற்றுகின்றனர். மருந்தை அருமையாகப் பயன்படுத்துகின்றனர்; மற்றைய முறைகள் இயற்கைக்கு மாறுபட்டன என்று கூறுகின்றனர். இவர்களும் வேறு சில வகுப்பினரும் நாள்முற்றும் அசையாது ஓரிடத்தில் நிற்றல்போன்ற பழக்கங்களைச் செய்கின்றனர்.