பக்கம் எண் :

தமிழ் இந்தியா11

  இந்திய மக்கள் கடல்கோளைப் பற்றிக்கூறும் வரலாறு சதபதப் பிராமணத்தில் (கி. மு. 1300) முதன்முதற் காணப்படுகின்றது. வடமொழி நூலிற் றனித்து நிற்கும் கதையாயிருப்பதால் இது அக்கேடியரிடமிருந்தோ தமிழரிடமிருந்தோ ஆரியருக்குக் கிடைத்ததென வரலாற்று நூலார் கூறுகின்றனர். சதபதப் பிராமணத்திலும் புராணங்களிலும் கூறப்படும் வெள்ளப் பெருக்கின் வரலாறு வருமாறு:

  மனு தனது காலைவழிபாட்டைச் செய்துகொண்டிருக்கும்போது ஒரு மீன் அவரது கையில் வந்தது. அம் மீன் மனுவை நோக்கி, "என்னைக் காப்பாற்று நான் உன்னைக் காப்பேன்; ஒரு வெள்ளப் பெருக்கு எல்லா வுயிர்களையும் அழித்துவிடும்" என்றது. அவர் மீனை ஒரு முட்டியுள் விட்டார். அது பெரிதாக வளர்ந்தபோது அவர் அதனை ஒரு குளத்தில் விட்டார். அது இன்னும் பெரிதானபோது அவர் அதைக் கடலுள் விட்டார். பின்பு மீன் அவரை ஒரு தோணி செய்யும்படி வேண்டிற்று. மனு அப்படியே செய்தார். வெள்ளப் பெருக்கு நேர்ந்தது. மீன் தலையில் ஒற்றைக் கொம்புடன் வந்தது. மனு கொம்பில் ஒரு கயிற்றைக் கட்டினார். மீன் அவரை வடமலைக்குக் கொண்டு போய்விட்டது. மீன், "யான் உன்னைச் காப்பாற்றிவிட்டேன், தோணியை மரத்திற் கட்டு," என்று மனுவிடங் கூறிற்று.

  மாபாரதத்தில் இவ் வரலாறு வேறு வகையிற் கூறப்படுகின்றது. வைவசுதமனு வைசாலவனத்தில் தவஞ் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது மீன் ஆற்றங்கரையில் வந்து மற்ற மீன்களைப் பார்த்துத் தன்னைக் காக்கும் படி கேட்டது. மனு அம்மீனை எடுத்துச் சாடியில் விட்டார். பின் மேற்கூறியவாறு சொல்லப்படுகின்றது. மனு புழுது குடிகளுடனும் பலவகை விதைகளுடனும் தோணியில்