பக்கம் எண் :

110தமிழ் இந்தியா

நோட்டிலுள்ள சபைகளுக்கு அனுப்பப்படும் செய்தி ஓலைகள் திருமுகம் எனப்பட்டன. நடுவிருக்கை என்பவன் மனுச் செய்பவனுக்கும் கருமிக்கும் இடையில் நின்று செய்திகளை அறிவிப்பவன். ஆவணத்தி என்பவன் காரிய (Executive) உத்தியோகத்தன். வரிப் பொத்தகம் நாட்டுவரி தொடர்பான கணக்குகள் தீட்டப்படும் பொத்தகம். அதற்குப் பொறுப்பாயுள்ள கருமியும் அப் பெயரால் அறியப்பட்டான். புரவுவரி என்பது நிலவரி. புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரிப்பகுதி (Land Tax Department). வழக்காளியின் வாக்குமூலம் முறைப்பாடு எனப்பட்டது. நிலம் தொடர்பான வழக்குகள் ஆட்சி ஆவணம் முதலியவைகளை நோக்கி முடிவு செய்யப்பட்டன.
மக்கட் பிரிவு

  மக்கள் தொழிற் பிரிவுகள் பற்றிக் கூட்டங் கூட்டமாகப் பிரிந்து வாழ்ந்தபோதும் பொதுக் கருமங்களில் ஒத்துழைத்தார்கள். 1ஈழவர் அக்காலத்தில் பனை தென்னைகளில் ஏறி மது இறக்கவில்லை. வருணம் என்பது தென்னிந்திய மக்களாற் கைக்கொள்ளப்படவில்லை. சில பிரிவினர் சிற்சிலவற்றைச் செய்தல் கூடாதென்னும் வழக்கு இருந்தது. இது கம்மானருக்குச் சோழ அரசன் எழுதியளித்த பட்டைய மொன்றால் விளங்குகிறது. வீட்டில் நடக்கும் நன்மை தீமைகளில் இரண்டு சங்கு ஒலித்தல், மேளமடித்தல், வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது மிதியடிதரித்தல், வீட்டுக்கு வெள்ளையடித்தல் இரண்டு மாடி வீடுகட்டுதல் வீட்டின் முன்புறத்தைத் தாமரை ஆம்பல் முதலிய பூமாலைகளால் அலங்கரித்தல் போன்ற சகாயங்கள் அப்பட்டயத்தில் வழங்கப்பட்டுள்ளன.


1. இவர்கள் இலங்கையினின்றும் வந்து இந்தியாவிற் குடியேறினோர்; மலையாளத்திற் பெரிதும் காணப்படுவர்.