திண்ணைச் சட்டம்பியார் என்பது இன்றும் வழக்கு. ஆசிரியனுக்கு மாணவர் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் கல்வி பயின்றனர். ஏட்டில் எழுதப்பட்ட புத்தகங்கள் வழங்கின. ஏடும் எழுத்தாணியும் கணக்காயராற் பயன்படுத்தப்பட்டன. சிறுவர் மணலில் எழுதிப் பயின்றார்கள். ஆசிரியனின் முதல் மாணவன் அவனுக்கு உதவியாளனாயிருந்தான்; அவன் சட்டாம்பிள்ளை எனப்பட்டான். மாணவர் அவனுக்கு அடங்கி நடந்தார்கள். காலையில் மாணவர் மரத்தடியிலோ திண்ணையிலோ கூடினார்கள். ஆசிரியன் வந்ததும் அவர்கள் எல்லோரும் எழுந்து இருவென இருந்து அவன் கூறுவதைக் கருத்தாகக் கேட்டுப் பயின்றனர். தொல்காப்பியர் காலத்தில் இவ்வகைப் பள்ளிக் கூடங்களே இருந்தன. மாணக்கர் ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ உவாத்தியாயருக்கு வேண்டியவற்றை (பெரும்பாலும் தம் வயல்களிலும் கொல்லைகளிலும் கிடைப்பவைகளை) கையுறையாகக் கொடுத்தனர். மாணாக்கன் கல்வியை நிறுத்துங்கால் பெரிய கூட்டங்கூடி அவன் பயின்ற நூலைச் சபையோருக்குப் பிரசங்கிப்பித்து அவன் திறமையைக் காண்பிப்பதும் மரபாயிருந்தது. இலங்கை அரசர் வரலாற்றால் அறியப்படுவன சில இலங்கை அரசர் பெரும்பாலும் தமிழர்கள் அல்லது தமிழ் இரத்தக் கலப்புடையவர்களாக இருந்தனர். இவர்களின் அரண்மனைப் பழக்க வழக்கங்கள் தமிழ் அரசு குடையனபோலவே இருந்தன. அரசனுக்குப் பக்கத்தில் வலங்கை இடங்கை என்னும் பெருமக்கள் இருந்தனர். சேனாபதி அரசனுக்கு அடுத்தபடியில் அதிகார முடையவனாயிருந்தான். அரண்மனைச் சமையலறையில் ஆடவரே வேலை செய்தனர். சமையலறையில் புழங்கும் தட்டுக்களும் |