அப்பால் திரும்பிச் செல்வர். அரசனுக்குப் பின்காட்டிச் செல்வது மரியாதைக்குறைவு என்று கருதப்பட்டது. மக்கள் அரசனுடன் பேசும்போது தம்மை அடிமைகள் (அடியேன்) நாய்கள் (நாயேன்) என்று குறிப்பிட்டுப் பேசுவார்கள்.1 இயல் 6 கிழக்கே தமிழரின் குடியேற்ற நாடுகள் கிறித்துவ ஆண்டுகளின் முன்னர் தமிழ்மக்கள் சுமத்திரா, யாவா, பாலி முதலிய தீவுகளிலும், பர்மா, சீயம், இத்துச் சீனம், மலாய், குடாநாடு முதலிய நாடுகளிலும் குடியேறி இராச்சியங்களைக் கோலி ஆட்சிபுரிந்தனர். அக்காலத்தில் அக் குடியேற்ற நாடுகளில் சைவமதம் பரவியிருந்தது. அந்நாடுகளிற் காணப்படுகின்ற பழைய அழிபாடுகளும் கல்வெட்டுகளும் பழங்கதைகளும் நன்கு ஆராயப்பட்டுள்ளன. அவைகளை ஆதாரமாகக்கொண்டு அந்நாட்டு வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவ் வரலாறுகளால் அக்காலத்துக் கடல் கடந்து சென்ற தமிழரைப்பற்றி யாம் நன்கு அறிதல் கூடும். மணிமேகலை என்னும் தமிழ் நூல் (கி. பி. 200) சாவகத் தீவிலே நாக புதத்திலிருந்து அரசாண்ட பூமிசந்திரன், புண்ணியராசன் என்னும் அரசர் இருவரைக் குறிப்பிடுவதோடு தமிழ் வணிகர் மரக்கலங்களில் சரக்குகளை ஏற்றித் தொலைவிடங்களிற் கொண்டு சென்று விற்றுப் பெரும்பொருளீட்டினார்கள் என்றும் கூறுகின்றது. 1. Robert Knoxs Ceylon, ஸ்ரீ விக்கிரமராச சிங்கா (சிங்களம்), இந்நூல்களால் மேற்குறித்த பொருள்கள் விளங்குகின்றன. |