பக்கம் எண் :

தமிழ் இந்தியா123

முதலியவற்றை அரசர் எவரும் கவர்ந்து கொள்ளுதல் ஆகாது. பிராமணர், அரசன், அரசினன் பிள்ளைகள் மாத்திரம் ஆபரணங்களைக் கழற்றாது கோவிலின் உள்ளேசெல்லலாம். பெருமக்களின் பரிவாரங்களாகச் செல்லும் பொதுமக்களும் ஆடம்பரமில்லாத உடையுடன் உள்ளே செல்லலாம்; அவர்கள் நந்தியாவர்த்த மாலையையன்றி வேறு மாலைகளை அணிந்துகொண்டு செல்லுதல் ஆகாது. ஆலயத்துள் இருந்து எவரேனும் வெற்றிலை போட்டுக்கொள்ளவோ உணவு அருந்தவோ கூடாது. பொதுமக்கள் ஆலயத்தின் உள்ளே செல்லுதல் ஆகாது; உள்ளே சண்டை அல்லது பரிகாசம் முதலியனவும் செய்தல் கூடாது. சிவனையும் திருமாலையும் வணங்கும் பிராமணரும் நல்ல பழக்க வழக்கமுடையவர்களும் மாத்திரம் உள்ளே தங்கி நின்று மெதுவாகத் துதிபாடிக் கடவுளைத் தியானிக்கலாம். அரசனையன்றி வேறெவராவது ஆலயத்துக்கு முன்னால் செல்ல நேர்ந்தால் தேரினின்றும் கீழே இறங்கிக் குடைபிடியாது நடந்து செல்லுதல் வேண்டும். பிற நாட்டவர்களுக்கு இவ்விதி விலக்கப்பட்டுள்ளது. பிராமணர், அரசர், மந்திரிமார், அரசனின் பிள்ளைகள் திருமாலை வழிபடும் குருமார் பொது மக்களுள் சிறந்தோர் முதலியவர்கள் விருந்தாக வந்தால் ஆலயத்தின் தலைமைக்குரு இவர்களை வரவேற்றுச் சொன்ன முறைப்படி உணவு, நீர், வெற்றிலை முதலியன கொடுத்தும் அவர்களுக்கு வேண்டியன புரிந்தும் உபசரித்தல் வேண்டும்.

  இதில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளைக் கடக்கின்றவர் எவரும் ஞாயிறும் திங்களும் உள்ள அளவும் நரகத்தைச் சேர்வார்கள்; இக்கட்டளைகளுக்குட்பட்டு அவைகளை வலுப்படுத்துகின்றவர்கள் இத்தருமத்தை உண்டாக்கியவர் பெறும் பலனிற் பாதியைப் பெறுவர்.