பக்கம் எண் :

140தமிழ் இந்தியா

வழிபடுவாராயினர். திருவானைக்கா, தில்லையம்பலம், திருவாலங்காடு முதலிய தென்னிந்திய ஆலயங்களின் பெயர்களால் இதன் உண்மை நன்கு தெளிதும், முன் இலிங்கங்கள் நிறுத்தி வழிபடப்பட்ட இடங்களிலேயே பின்பு ஆலயங்கள் எழுந்தன. உலகம் முழுமையிலும் இவ்வகை வழிபாடு ஒரு காலத்திற் காணப்பட்டது.


ஆலமர் கடவுள்


  ஒவ்வொரு கிராமங்களிலும் மன்றங்கள் உண்டு. மன்ற மென்பது ஊருக்கு நடுவே மக்கள் கூடும் மரத்தடி. மரத்தைச் சுற்றித் திண்ணையிருந்தது. ஞாயத் தீர்ப்பு, பள்ளிக்கூடம், ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகள் இன்னும் கிராம மக்களின் எல்லாக் கிளர்ச்சி, நிகழ்ச்சி என்பவைகளுக்கு இடம் இதுவே. மன்றத்தே பெரும் பாலும் ஆலமரம் நின்றது. நிழல் மரங்களில் ஆல் தலைமையுடையது. மன்றத்து மரங்களின்கீழ் இலிங்கம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனைச் சுற்றித் தினமும் அலகும் மெழுக்குமிடப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது.1 ஆலின் கீழ் இருந்தமையின் கடவுளுக்கு ஆலமர் கடவுள் ஆலமர் செல்வன் என்னும் பெயர்கள் உண்டாயின. பழந்தமிழ் நூல்களில் இப்பெயர்களே சிவனைக் குறிக்கப் பெரிதும் காணப்படுகின்றன. ஆல் ஐயன் இடம் ஆலயம் எனப்பட்டது.


  1. "கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
    யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
    மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
    வம்பர் சேக்கும் கல்லடைப் பொதியில்" (பட்டினப்பாலை)

(கொண்டி மகளிர்-சிறை பிடிக்கப்பட்ட மகளிர்; பொதியில்-மன்றம்.)