தமிழருடையனவாகா எனச் சிலர் கருதுதல்கூடும். எம்மொழியில் ஆகமங்கள் எழுதப்பட்டுள்ளவேனும் அவைகளிற் பொதிந்துள்ள பொருள்களைக்கொண்டு அவை எவருக்குச் சொந்தம் என அறிதல் எளிது. ஆகமங்கள் தமிழருடையனவே என்பது வரலாற்று நூலார் நன்கு ஆராய்ந்து அறுதியிட்ட முடிவு. உபநிடதங்கள் பாரசீக மொழியிலும் லத்தீன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரசீகரும், இத்தாலியரும் அந்நூல்கள் தங்களுடையனவென்று வாதாடமாட்டார்கள். ஆலயம் கட்டும் சிற்பக்கலை, திருவுருவங்களைச் செய்யும் முறை முதலியனவும் இவைபோன்றனவும் பெரும்பாலும் அவ்வத்தொழில்களுக்குரிய கூட்டத்தினரிடையே ஏட்டிலெழுதப்படாது பரம்பரையாகத் தொடர்ந்து வந்துள்ளன. இவ்வகை வழக்குகள் எல்லாவற்றையும் திரட்டிப் பிற்காலத்தில் ஐயர்மார் எழுதிவைத்தனர். திருவுருவங்கள் உலோகங்களில் அமைக்கும் முறைகள் நீண்டகாலம் எழுதப்படாது பரம்பரையாக வந்ததென்பதை கன்கூலி என்பார் தென்னிந்திய வெண்கலத் திருவுருவங்கள் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார்.1 ஆகமங்களிற் கூறப்படும் யோகம், ஞானம் முதலிய பகுதிகள் பிற்காலத்து எழுதப்பட்டனவாதல் வேண்டும். தமிழில் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாக நூல் செய்தலே வழக்கு. வீடுபற்றி நூல்செய்தல் வழக்கின்று.2 1. South Indian Bronzes - G. O. Gangoly. 2. "அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின்.....நூல்களாற் கூறப்படுவன ஏனைய மூன்றுமேயாம்." (பரிமேலழகர்) அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி, வீட்டின் தன்மை இலக்கத்தாற் கூறாரென்றுணர்க. இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பாலாகக்கூறி......வீடு பேற்றிற்கு நிமித்தங் கூறினார்." - (நச்சினார்க்கினியர்). |