பக்கம் எண் :

184தமிழ் இந்தியா

"அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய
மும்முதற் பொருட்கும் உரிய வென்ப" (தொல். செ. 106)

இவ்வழக்குப்பற்றியே திருவள்ளுவரும் முப்பாலாக நூல்செய்தார். ஆரியரின் முறையைப் பின்பற்றியே தமிழில் நூல்கள் செய்யப்பட்டன என்று சிலர் வாதிப்பர். இது தந்தைக்கு மகன் முப்பாட்டன் என்பது போன்றதோர் கொள்கை. நாற்பாலாக நூல் செய்தலே ஆரியர் மரபு.

புராணங்கள்

   புராணங்கள் என்பன பழைய வரலாறுகள். புராணங்களில் பழைய அரசர் வரலாறுகளும் அவர்கள் காலங்களில் நிகழ்ந்த பெரிய செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசர்களது சபைகளிலே புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசனது பரம்பரையிலுள்ள வரலாறுகளை எல்லாம் திரட்டிப் பெருநாட்களில் அரச சபைகளில் கூறுவது வழக்கம். இவ்வாறு வடநாட்டு அரசர் சபைகளில் இருந்த புலவர்கள் சூதர் எனப்பட்டனர். இதனாலேயே புராணங்கள் சூத முனிவராற் சொல்லப்பட்டன என்று வழங்குகின்றன. இவ்வாறு கன்ன பரம்பரையில் வந்த வரலாறுகள் பிற்காலத்துத் திரட்டி எழுதப்படலாயின. இவைகளே பழைய இந்திய மக்களின் வரலாறுகளாகும். மற்றைய நாடுகளிற் காணப்படும் பழைய வரலாறுகள் புராண வரலாறுகளைவிடச் சிறந்தன என்று கூறமுடியாது. அபஸ்தம்பர் (கி. மு. 400), கௌடலியர் முதலானோர் புராணங்களைக் குறிப்பிட்டுள்ளமையின் அக்காலத்திலேயே புராணங்கள் தோன்றியிருந்தனவென பார்கித்தர் (Pargiter) என்னும் ஆரியர் கூறுவர்.