சுமேரிய மக்களின் வடிவம் போன்றது. இக்கால இந்தியர் கிரேக்கர் இத்தாலியர்களிடையே ஆரியரல்லாத மக்களின் சாயல் காணப்படுகின்றது. உருவச் சிலைகளிலிருந்து அறியுமளவில் பழைய சுமேரியர் இந்தியாவிலுள்ள திராவிட மக்களை உடலமைப்பில் ஒத்திருந்தனர். அக்காலச் சுமேரியன் தமிழை அல்லது அது தொடர்பான மொழிகளை வழங்கும் இன்றைய ஒரு திராவிடனை மிக ஒத்திருந்தான். சுமேரியர் கடல் வழியாலும் தரைவழியாலும் தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத் தாக்குகளை அடைந்த இந்திய மக்கள் என்பது இருக்கக் கூடாததன்று. இவர்களின் நாகரிகம் இந்தியாவிலே சிந்துநதிப் பள்ளத்தாக்குளில் வளர்ச்சியடைந்திருக்கலாமென்று யான் எண்ணுகின்றேன். 1 உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியாளர் உலகின் ஆங்காங்கு வசதியும் மக்களின் உடற்கூறு, மொழி, வழிபாடு ஆதியன ஒத்திருத்தலை இவ்வாறு ஆங்காங்குக் காட்டியிருக்கின்றனர். இவை மக்களின் ஒரு பொது உற்பத்தியையும் சிறப்பாகத் தமிழரின் பழமையையும் நன்கு விளக்குவன. மக்கள் வளர்ச்சி நூலார் (Anthropologists) ஓர் ஆதித் தாய் தந்தையரினின்றே உலகமக்கள் பெருகினார்கள் என வலியுறுத்துவர். உலகிலே மிகப் பழைய மனித எலும்பு யாவாதேசத்திற் கிடைத்தது. இதன் காலம் ஐந்திலட்சம் ஆண்டுகள் எனப்படுகின்றது. ஆகவே விஞ்ஞானிகள், பூமியின் மத்தியிற்கிடந்த பெரிய கண்டத்திலேயே மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனத் துணிகின்றனர். அவ்வாறாயின் பெரிய வெள்ளப்பெருக்கு, பூமத்தியில் விளங்கிய கண்டத்தில் நிகழ்ந்ததாகலாம் எனக் கூறுதல் பிழையாகாது. 1. The Ancient History of the near East, p. 173 - H. R. Hall. |