மக்கள் எல்லோரும் தீவினைகளினின்றும் நீங்கி நல்வழிப்படவேண்டுமென நினைந்து கடவுளை நினைப்பது எனக் கருதப்படுவதாயிற்று. இது பரார்த்த பூசை பிறர்பொருட்டுச்செய்யும் பூசை, எனப்படலாயிற்று. "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே" என்றவாறு வேண்டுதல் பரார்த்த பூசைக்கு எடுத்துக்காட்டாகும். யோகநிலை கைவரப்பெறாத பார்ப்பானையே திருமூலர் "பேர்கொண்ட பார்ப்பான்" எனக் கூறினார் ஆதல்காண்க. யோகம் கைவந்த பெரியோர் நினைப்பன நினைத்தபடி ஆகும் என மக்கள் நம்பினார்கள்.1 சித்தர்கள் எனப்பட்டோர் யோகத்தின் மகிமையினால் பல புதுமைகளைச் செய்தோர்களேயாவர். எல்லாச் சமயத்தவர்களும் தத்தம் சமய முதல்வர்கள் புதுமைகளை விளைத்தார்களெனக் கூறுகின்றனர். இறைவனிடத்தே, உள்ளம் படிந்து நிற்கும் உயிர்களிடத்து இறைவனின் இறைமைக் குணங்கள் சில உண்டாவது இயல்பு எனச் சைவ சித்தாந்த நூல்கள் கூறும். மருத்துவம் சோதிடம் போன்ற பெரிய உண்மைகள் யோகிகளால் தமது தெளிந்த உள்ளக்காட்சியிற் கண்டு கூறப்பட்டனவென்று நம்பப்படுகின்றன. 1. "......நின் றொண்டரொடு பயிறலிற் பூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும் நின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப் பன்னாள் நோக்கின ராதலி னன்னவர் பாவனை முற்றிய பாவகப் பயனின்யான் மேவரப் பெற்றனன்...... எனக் குமரகுருபர அடிகள் கூறுதல் காண்க. |