எளிதில் நிச்சயம் செய்யலாம். தமிழ்த்தெய்வங்களுக்கு ஐயர்மார் வடிமொழியைச் சாற்றியே பூசை செய்கின்றார்கள் எனின், இது வடிமொழியில் நம்பிக்கை வைத்த பிற்கால அரசர்களின் ஆணையால் உண்டானவழக்கு. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" அரசினர் தலையீட்டினால் பெரிய மாற்றங்கள் எளிதில் உண்டாகும். இதற்குச் சான்று தாழ்ந்தோரும் தாழ்த்தப்பட்டோரும் ஆலயங்களிற் புகுத்தப்படுவது ஒன்று; இந்தி கட்டாயக் கல்வியாக வந்தது மற்றொன்று. சமயச் சொற்கள் சமயத் தொடர்பாகத் தமிழில் வழங்கும், ஆணவம், கன்மம், மாயை, பதி, பசு, பாசம் போன்ற சொற்களும் பிறவும் வடமொழிச் சொற்களெனப் பெரும்பாலும் கருதப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களில் ஒருசாரர் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பட்டுள்ள சொற்களை மாத்திரம் தூய தனித்தமிழ்ச் சொற்களாகக் கொண்டு ஏனையவைகளைப் பிறமொழிச் சொற்களென ஒதுக்கிவருகின்றனர். மேல்நாட்டு மொழிகளில் எழுதப்படும் நூல்களில் ஒவ்வொருகலைக்கும் உரிய தனிச்சொற்கள் (கலைச்சொற்கள்) ஆளப்பட்டுள்ளன. இம்முறை எல்லாமொழியினருக்கும் பொது. யாப்பருங்கலவிருத்தியில், ஆடை நூல் அணிகலநூல் என, எத்தனையோ துறைகளைத் தனித்தனி விரித்துக்கூறும் பலநூல்கள் தமிழில் நிலவின என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வோர் துறைகளையும் விளக்க எழுந்த தனிநூல்களில் அவ்வத்துறைகளுக்குரிய தமிழ்ச்சொற்கள் (கலைச்சொற்கள்) ஆளப்பட்டன என்று கூறுதல் கற்பனை எனச் சாலாது. பற்பல காரணச்செறிவால் பழந்தமிழ் இலக்கியங்கள், சில நீங்கலாக ஏனைய மாண்டொழிந்தனவென்பதும் கற்பனையன்று. இப்பொழுது பழந்தமிழ் |