பக்கம் எண் :

208தமிழ் இந்தியா

நூல்களிற் காணப்படுவன பெரும்பாலன இலக்கியச் சொற்களே. இவ்விலக்கியச் சொற்களை மாத்திரம் பழந்தமிழ்ச் சொற்கள் எனக்கொண்டு அவையல்லாத பிறவற்றைப் பிறமொழிச் சொற்கள் என ஒதுக்கிவிடுதல் நியாயமன்று. இன்றும், ஓடஞ்செய்வோர், ஆடைநெய்வோர், சிற்பவேலைபுரிவோர், பானைசட்டிவனைவோர் போன்று ஒவ்வொரு தொழில்புரிபவர்களிடையே அவ்வத்தொழில்களுக்குரியனவும் யாம் அறியாதனவுமாகிய பல தமிழ்ச் சொற்கள் வழங்குதலைக் காணலாம். யோவுடுபிறியில் (Jouveau Dubreuil) என்னும் பிரான்சியர் எழுதிய தென்னிந்தியக் கட்டிடக்கலை என்னும் நூலில் கட்டிட உறுப்புகளை உணர்த்தும் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. அவை நமக்குப் புதியனவாகத் தோன்றுகின்றன. ஒரு கலை எந்த மக்களிடத்தில், ஆதியிற்றோன்றி வளர்ச்சியடைகின்றதோ, அம்மக்களின் மொழியில் அதற்குரிய கலைச்சொற்கள் பல தோன்றிவழங்கும். அக்கலை இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு அது அங்கு வளர்ச்சியடையுங்கால் அக்கலைச் சொற்கள் அயல்மொழிகளில் கருத்திற்கேற்ப மொழிபெயர்த்து அல்லது, அம்மொழிகளுக்கேற்ற உச்சரிப்பு முறையில் திரித்து வழங்கப்படுதல் இயல்பு. முற்காலத்து இந்தியாவினின்றும் எகிப்து, கிரீசு, பபிலோன், பலஸ்தின் முதலிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட குரங்கு, மயில், அரிசி, இஞ்சி, கருவா, தந்தம், திப்பிலி, ஆடை முதலியவைகளின் பெயர்கள் அந்நாட்டு மொழிகளில் திரித்து வழங்கப்பட்டமையே1 இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.


1. கவு, துகிம், ஒறிசா, இஞ்சிபெர், கபிறொன், இபிம், பிப்பிலி, சிந்து.