பக்கம் எண் :

214தமிழ் இந்தியா

சொந்த உடைமை. சித்தாந்தப்பொருள்களை உணர்த்த வழங்கும் சொற்கள் ஆராய்ச்சியின்றிப் பிறமொழிச் சொற்களென விலக்கற்பாலனவல்ல. தமிழ்ச் சொற்கள் வடமொழியிற்றிரித்து வழங்கப்பட்டு, அவை மறுபடியும் தமிழில் வேறு உருவத்துடன் புகுந்திருத்தல்கூடும். இதற்கு உதாரணம் சென்னையிலுள்ள அம்பட்டன் பாலமே. ஆதியில் ஹமில்டன் பாலமெனப்பட்ட இப்பாலம் உச்சரிப்போரது சோர்வினால் அம்பட்டன் பாலமாக நிலவுகின்றது. ஆங்கிலமொழியில் அது "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என வழங்கும். "ஹமில்டன்" "பார்பர்" (அம்பட்டன்) ஆனதுபோலப் பல தமிழ்ச்சொற்கள் வடமொழியிற் புகுந்து தமது உருவத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கின்றன என்று யாம் கருதுகின்றோம்.

  "ஆரியமக்கள் இந்தியநாட்டை அடைவதன்முன் தமிழருக்கு, நாகரிகமில்லை; சமயமில்லை; கலைகளில்லை. ஆரியர் வந்த பின்புதான் தமிழர் ஆரியரைப் பார்த்து மெல்லமெல்ல நாகரிகமடைந்து மிருக நிலையினின்று மேல்நோக்கி வந்தார்கள்" என்னும் பொல்லாத கொள்கை பழைய வரலாற்றாசிரியரிடத்திற் குடிகொண்டிருந்தமையால் அவர்கள் தமிழர்களிடத்துக் காணப்படும் உயர்வுகளெல்லாம் ஆரியமக்களின் சேர்க்கையால் நேர்ந்தனவென்று குருட்டுத்தனமாகக் குறிப்பிட்டனர். சேர்யோன் மார்தல் என்பவரே (மொகஞ்சொதரோ அழிபாட்டு ஆராய்ச்சிக்கு) ஒரு கணத்துக்குமுன் "தமிழர்கள் ஒரு காலத்தில் நாகரிகமடைந்திருந்தார்களென்று இவ்வுலகம் அறியவில்லை" என வியப்புற்றுக் கூறியுள்ளார்.1


1. Never for a moment, it was supposed that five thousand years ago, before ever the Aryans were heard of, the Punjab and Sind, if not other parts of India as well were, enjoying an advanced and singularly uniform civilization of their own, clearly akin, but in some respects even superior to that of contemporary Mesopotamia and Egypt. - Sir John Marshall.