இன்னொரு பட்டையத்தில் நாலூரியிருக்கும் கடவுள் "விடுகண்" எனக் காணப்படுகின்றது. விடுகண் என்பது திறந்தகண். கடவுள் இமையாதவர் ("இமையா நாட்டம்" உடையவர்) இக்காலத் தமிழர் ஐதீகத்தோடு இது ஒத்துள்ளது. கடவுள் மக்களுக்கு எல்லா உதவியும் அளிப்பவர் எனவும் அக்காலத்தவர் நம்பினர். இது, "இது உதவு மின் அடு ஆண்" எனப் பொறிக்கப்பட்ட பட்டையத்தால் விளங்குகின்றது. (கடவுள்) உதவி செய்கின்ற மீனவரின் கடவுள் என்பது இதன் பொருள். ஒரு முத்திரையில் மூன்று முகமும் யோகத்தில் வீற்றிருக்கும் கோலமுமுடைய ஒரு வடிவம் காணப்படுகின்றது. இவ்வடிவைச் சுற்றிப் பல விலங்குகள் இருக்கின்றன. இது, கடவுள் பசுபதி என்னும் கருத்தை விளக்க அமைக்கப்பட்ட வடிவம் எனக் கருதப்படுகின்றது. பல குலக் குறிகளை (Totem) யுடைய நாட்டுமக்கள் எல்லாரும் வழிபடும் கடவுள் என்பதை விளக்க இது கற் சிப்பியால் வெட்டப்பட்டதாகலான். ஓரிடத்தில் கடவுளின் பெயராக எண்மை என்னும் சொற் காணப்படுகின்றது. இன்னொரு முத்திரை கடவுள் எட்டாக இருக்கிறார் எனக் கூறுகின்றது. கடவுள் மீன் வடிவில் நாட்டில் பல பகுதிகளில் வழிபடப்பட்டார். தலையிலே சூலம் உடைய கடவுள் வடிவங்கள் முத்திரைகளிற் காணப்படுகின்றன. கடவுள் மூன்று கண்ணுடையவரென்று முத்திரைகள் தெளிவாகக் கூறுகின்றன. ஒவ்வொரு கண்ணும் தனித்தனி வழிபடப்பட்டது. பட்டையங்களில் மூன்று கண் என்பது "மூன்கண்" எனக் கூறப்பட்டுள்ளது. மூன்று கண்ணுடைய பெரிய மீன் என ஒரு பட்டையத்திற் காணப்படுகின்றது. |