எப்பொழுதும் கரையிருக்கும் திசையைநோக்கிப் பறக்கும் இயல்புடையன. கரையை அறிவதற்கு நோவா பறவைகளைத் திறந்துவிட்ட வரலாறு கிறித்துவமறையிற் காணப்படுகின்றது. பிளினி, கொஸ்மஸ் என்போர் கரையை அறிவதற்குக் குருவிகளைப் பயன்படுத்தும் வழக்கம் சிங்கள மக்களிடையே உண்டு என எழுதியுள்ளார்கள். பாரசீகக் குடாக்கடல்வியாபாரம் ஆரம்பத்தில் சாலடியர் வசம் இருந்தது. இவர்கள் கடற்கொள்ளைக்காரராயிருந்தனர். கி. மு. 694-ல் இக்கடற்கொள்ளைக்காரர் சென்னாசெரிப் (Sennacherib) என்னும் சாலடிய அரசனால் ஒழிக்கப்பட்டார்கள். இவ்வாணிகம் பின்பு பொனீசியர் கைக்கு மாறிற்று. பாரசீகக் குடாவிலுள்ள பகேரின் (Bharein) தீவுகளில் இவர்கள் வாணிகம் நடத்தியதைக் குறிப்பிடும் பழைய புதைபொருள்கள் கிடைத்துள்ளன. கி. மு. 606-ல் பபிலோனியர் அசீரியரை வென்றனர். அப்பொழுது நினேவா கிழக்குத் தேசங்களின் பெரிய சந்தையாக விளங்கிற்று. அங்கு, பொனீசியர், யூதஅடிமைகள், அயோனியர், இந்தியர் முதலியோர் தமது வியாபாரப்பண்டங்களை விற்கும் பொருட்டுக் கூடினார்கள். அக்காலத்தில் பபிலோனியர் இந்தியக்கரைகளிற் குடியேறியிருந்திருந்தார்களாதல்கூடும். அலெக்சாந்தர் இந்தியாவை அடைந்தபோது பபிலோனில் நடத்தப்படுவதுபோன்ற விவாகச்சந்தைகள் 1 அங்கு நடத்தப்பட்டன என்று ஸ்ராபோ கூறியுள்ளார். 1. இதைக்குறித்துக் கொதோதசு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் ஒருமுறை பபிலோனியாவில் விவாகச்சந்தை கூடும். இங்கு மணப்பருவம் அடைந்த பெண்கள் எல்லோரும் வந்து கூடுவார்கள். மணம்முடிக்க விரும்பிய இளைஞரும் திரளுவார்கள். அப்பொழுது விலைகூறுவோன் மிகவும் அழகுள்ள பெண்ணிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக விலைகூறுவான். கூடியதொகை அளிப்பவன், கூறப்படும் பெண்ணை வாங்கி மணம் முடித்துக்கொள்கிறான். இறுதியில் அழகில்லாதவர்களும் அங்கப் பழுதுடையவர்களுமாகிய பெண்கள் விலை கூறப்படுவார்கள். இவர்களை வாங்குபவர்களுக்கு அழகிய பெண்களின் விலையாகக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதி கொடுக்கப்படுகின்றது. பெண்களை வாங்குபவர்கள் அவர்களைச் சட்டப்படி மணந்துகொள்ளுதல் வேண்டுமெனத் தக்க உறுதி அளித்துச் செல்லுதல்வேண்டும். |