பக்கம் எண் :

238தமிழ் இந்தியா

ஐரோப்பியநாடுகளில் இறைச்சியைப் பழுதுபடாமற் பாதுகாக்கவும், உணவுகளுக்குச் சேர்க்கவும் பயன்படுத்தப்பட்டது. கிரேக்கர் மருந்து முறையில் இதனை மிகுதியாகப் பயன்படுத்தினர். கிப்போக்கிறேற்சு (Hippocrates) என்பவர் இதனை இந்திய மருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்தஸ் காலத்தில் மிளகு உரோமில் மிக மதிப்புள்ள சரக்காகக் கருதப்பட்டது. அக்காலத்து ஓர் இராத்தல் மிளகின் விலை ஏழு ரூபாய்; இந்தியாவில் அதன்விலை இதன் பாதி அளவுதானும் இல்லை. பருவகாலத்தை அறிந்து கப்பல்கள் மிகுதியாக இந்தியாவுக்கு ஓடத்தொடங்கிய காலத்தில் மிளகின் விலை குறைந்துவிட்டது. அது மாவாக இடித்துப் பொட்டணங்களாக விற்கப்பட்டது. அலாறிக் என்னும் கொதியன் உரோமை முற்றுகை இட்டபோது, முற்றுகையை விடுவதற்கு, அவன் ஏனைய பொருள்களோடு 3,000 இராத்தல் மிளகையும் கேட்டான். உரோமிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பட்பட்ட பொருள்கள் மிகக்குறைவு. ஆகவே, உரோமிலிருந்து, ஏராளமான செல்வம் இந்தியாவை அடைந்தது. உரோமிலிருந்து ஏராளமான தங்க, வெள்ளி நாணயங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவிற் காணப்பட்ட பல்லாயிரக் கணக்கான உரோமன் நாணயங்களுட் பெரும்பாலன மலையாளக்கரையிலும் அதனையடுத்த கோயமுத்தூர்க் கோட்டம் மதுரை என்னும் இடங்களிலும் காணப்பட்டன. இந்நாணயங்களிற் பெரும்பாலன திபேரியஸ் குளோடியஸ் கேயஸ் (Tiberius, Gaius and Claudius) காலத்தன.


"யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்"


என அகநானூற்றிற் கூறப்பட்டுள்ளது.