முசிறி மலையாளக்கரையிலே பேர் ஆற்று முகத்துவாரத்திலுள்ளது. தமிழ் நூல்கள் இதனைப் பெரிய துறைமுகப்பட்டினமாகக் கூறுகின்றன. பொனீசியாரும் அராபியரும் இத்துறைமுகத்தில் வியாபாரம் நடத்தினர். உரோமிலிருந்து பாவை, அன்ன, விளக்குகள், நகைப்பேழைகள், மணமுள்ள மது என்பன இறக்குமதியாயின. அரசரும் செல்வரும் இம்மதுவினை உண்டனர். பெதுருங்கேரியரின் அட்டவணையின்படி முசிறியில் ஆகஸ்தஸின் கோயில் ஒன்றிருந்தது. தமிழ் அரசரின் பண்டசாலைகளை யவன வீரர் காவல் புரிந்தனர். முசிறியில் யூதர் அராபியர் பாரசீகர் குடியேறி யிருந்தனர். அவர்கள் தனித்தனி வீதிகளில் வாழ்ந்தனர். தோமஸ் ஞானியார் (Apostle Thomas) முசிறிக்கு அயலிலுள்ள மல்லன்காராவில் கி. பி. 50-ல் வந்து இறக்கினாரெனச் சீரிய கிறித்தவர்கள் நம்பிவருகின்றனர். கி. பி. 215-க்குப்பின் இவ்வாணிகம் விழுந்துவிட்டது; பாரசீகக் குடாக்கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் ஓரளவு நடைபெற்றது. சீனர் தமது மரக்கலங்களில் சீனாவுக்கு மிளகு கொண்டு சென்றனர். இடைக்காலத்தில் கோயில்களுக்கு மிளகு காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் ஓர் இராத்தல் மிளகின் விலை நாலு சிவின். அது தச்சு வேலை செய்பவன் ஒருவனின் நாலு நாட் கூலி. இவ்வாணிகம் வெனிஸ், செனோவா (Genoa) வியாபாரிகளின் கையில் இருந்தது. அவர்கள் இதனை அராபியரிடமிருந்து வாங்கினர். இவ் வியாபாரிகள் பணஞ்சம்பாதிப்பதை அறிந்த மேற்கு ஐரோப்பிய மக்கள் கிளர்ச்சிகொண்டனர். அதனால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்லும் கிட்டிய பாதையை அறிய முயன்றனர். இதனால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபடித்தான். வாஸ்கோடிகாமா என்னும் |