எல்லாப் பொருள்களையும், குணங்களையும், செயல்களையும் குறிக்க ஒவ்வோர் ஒலிக்குறிகளை அமைத்து ஒலிமுறையான மொழியை ஆக்கிக்கொண்டனர். இன்றும் பேச்சாளர் மேடைகளில் நின்று பேசும்போது பேச்சுக்கேற்ற பல அவிநயங்களைக் காட்டுகின்றனர். இவை பழைய பேச்சு வழக்கின் தேய்வுகளே. ஆதிமக்கள் சொற்களை ஆக்குவதற்குக் கைக்கொண்ட 1காரணங்கள் (மொழிப்பொருட்காரணம்) பெரும்பாலும் இன்று நம்மால் அறிந்து கூறமுடியாமல் இருக்கின்றன. சொற்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் தொடர்ந்துவருகின்றன. காலந்தோறும் புதிதாக அறியப்படும் பொருள்களையும் செயல்களையும் குறிக்கப் புதிய சொற்கள் தோன்றும். இவ்வாறு ஒருவகையில் மொழி வளர்ந்துகொண்டு செல்லும்போது பழைய சொற்கள் சில வழக்கொழியும்; அவற்றின் இடத்தைப் புதிய சொற்கள் சில ஏற்கும். இதனால் மக்கள் வழங்கும் மொழியில் காலந்தோறும் வேறுபாடுகள் காணப்படும். முன்னோர் எவ்வாறு சொற்களை உச்சரித்தார்களோ அவ்வாறு அவைகளை உச்சரிக்க அறிதலும், அவைகளை அவர்கள் பயன்படுத்திய மரபில் பயன்படுத்துதலுமே திருந்திய மொழிப்பயிற்சியாகும். பரதநாட்டியம் போன்று நடிப்பு மாத்திரத்திலுள்ள கூத்தைத் தமிழர் நாடகத்தமிழ் என வழங்கினர். மக்களின் அகஉணர்ச்சிகளுக்கேற்ப எழும் இயற்கை ஒலிகளைப் பின்பற்றி, மகிழ்ச்சி, வீரம், சோகம் போன்ற உணர்ச்சிகளை எழுப்புந் தொனியிற் பாடப்படும் பாடல்கள் இசைத்தமிழ் எனப்பட்டன. இவைபோலல்லாத பாடல்களும், இலக்கணங்களும் இயற்றமிழ் எனப்பட்டன. 1. மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றோ. தொல். உரி. 96 எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே. தொல். பெயர். 1. த. இ. - II-16. |