தோன்றியவர்கள் ஆகலாம். திராவிடர் இலங்கை முதல் கங்கை வெளிவரையிற் காணப்படுகின்றனர். எழுத்து மக்கள் பேச்சினால் தமது எண்ணங்களை அண்மையிலுள்ளவர்களுக்கு விளக்கினார்கள். சேய்மையிலுள்ளவர்களுக்குத் தம் எண்ணங்களை விளக்குவதற்கு அது பயன் அளிக்கவில்லை. ஆகவே சேய்மைக்கண் உள்ளவர்களுக்குத் தம் கருத்துக்களை உணர்த்தும் முகத்தான் எழுத்துக்கள் தோன்றின. ஆதியில் மக்கள் தங்கருத்துக்களைச் சித்திரங்கள் வாயிலாக விளக்கினர். ஒருவன் மற்றொருவனை வாளினாற் கொன்றான் என்னும் கருத்தை வெளியிட வேண்டுமாயின், கீழே ஒருவன் உதிரம் நாற்புறமும் பரவும்படி படுத்துக்கிடப்பதுபோலவும், மற்றொருவன் கையில் வாளை வைத்துக்கொண்டு ஓங்கி வெட்டுவதுபோலவும் எழுதிக்காட்டுவது வழக்கம். இவ்வகைச் சித்திரங்களும், உருவக் காட்சிகளும் மனிதருடைய புறத்துறுப்பைப் பற்றிய செயல்களைக் காட்டுவதற்காக மாத்திரம் பயன்பட்டு வந்தனவேயன்றி, மனத்தின் நிகழ்ச்சிகளாகிய கோபம், பொறாமை, துக்கம், மகிழ்வு, செருக்கு, வீரம், பயம் முதலிய தோற்றங்களைக் காட்டுவதற்குப் பயன்படவில்லை. ஆகவே மக்கள் இவ்வகை மனத்தோற்றங்களையும் மேற்படி உருவங்கள் மூலமாகத் தெரிவிக்கவெண்ணிப் பாடுபட்டு வந்தமையால், அவர்கள், சித்திரவேலையிலும் கல், மரம் முதலியவற்றால் உருவங்களைச் செதுக்குவதைப்பற்றிய வேலைகளிலும் திறமையடைந்தனர். எழுத்துக்கள் உண்டாயிராத காரணத்தினாலேயே ஆதியில் சித்திர வேலைகளும் உருவம் செதுக்கும் வேலைகளும் வளர்ச்சியடைந்திருந்தனவென்று கூறலாம். |