பக்கம் எண் :

தமிழ் இந்தியா257

"அதனைப் (மொழியைப்) பேசும் மக்களிலிருந்து மொழி பெயர்பெற்ற தெனக் கொள்வதே தகுதி, மொழிப்பெயரிலிருந்து மக்களின்பெயர் தோன்றிற்றென்பது ஏற்புடைத்தன்று, சங்ககாலப் புலவர்களின் சொல்லாட்சியிலிருந்து தமிழ் என்பது மொழிப் பெயரிலும் பார்க்கச் சாதிப்பெயரளவில் மிகப்பழமையுடைய தெனக் தெரிகின்றது. இது உலகின் மற்றப் பாகங்களிலுள்ள மக்கள் வரலாற்றோடும் ஒத்திருக்கின்றது. ஆகவே இதுகாறும் தமிழ்ச்சொல் தோற்றத்தைப்பற்றிக் கூறப்பட்டன அடியோடு மாறிவிடுகின்றன. தமிழின் தோற்றத்தைக் கூறவந்த எல்லோரும் அது சாதியையன்றி மொழியையே குறித்ததெனக்கொண்டனர். உண்மை இதற்கு எதிர்மறை, இச்சொல்லின் தோற்றம் குலத்தொடர்பாகவன்றி மொழித்தொடர்பாக இருத்தல் முடியாது. அநேக சாதிகளின் பெயர்களைப்போலக் குலத்துக்குரிய இப்பெயரும் விளக்கப்படுத்தக்கூடாமல் இருக்கின்றது. இச்சொல்லின் தோற்றத்திற்குரிய காலம் எல்லா வரலாற்றுக் காலத்தையும் துளைத்துச்சென்று, நம்மை இவ்வுலகம் ழுழுமையிலும் வாழும் மக்கட்குலங்கள் எல்லாவற்றின் பிறப்பையும், அவை பரவுவதையும் கண்ட ஓர் உலகத்துக்குக் கொண்டு செல்கின்றது. அது எல்லா வரலாற்றையுங் கடந்துசென்று மனிதப்பழமையின் ஆழத்திலுள்ள வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலம் ஒன்றைக் காட்டுகின்றது. அக்காலத்தைப்பற்றி மக்கட் குல ஆராய்ச்சி, கனவு காண்கின்றதேயன்றி அதைப்பற்றிய முடிவு ஒன்றும் கூறவில்லை. அவ்வகையான திரையின் பின் இச்சொல்லும் இருக்கின்றது. இம்மொழி உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் பழமை யுடையது."1


1. Dr. Krishnaswamy Iyengars commemoration volume p.346-The derivation of the word. Tamil-K, N. Sivaraja Piilai. த.இ.-II-17