இச் செய்யுட்கள் ஞாயிற்றினின்றும் தமிழ் பிறந்ததென்னும் வழக்குண்மையை விளக்குவன. சிவன், முருகன் என்னும் பெயர்கள் ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கின. ஆகவே தமிழ் என்னும் பெயர் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய யாதோ பழைய சொல் ஒன்றினின்றும் பிறந்ததென ஊகித்தல் பிழையாகாது. இது ஒருபோது எல் என்னும் சொல்லினின்றும் பிறந்திருக்கலாமென்பதைப் பண்டைத் தமிழர் என்னும் எமது நூலிற் காட்டியுள்ளேம். "தமிழ்ப் " பெயர்க்காரணம் தமிழ் என்னும் சொற்பிறப்பைப்பற்றி யாம் எமது கருத்தை வெளியிடுகின்றோம். இது முடிவானதன்று; ஏனையோர் கூறியவைகளோடு ஒப்பிட்டு ஆராயத்தக்கது. இவ்வுலக மத்தியில் பெரிய பூகண்டம் (நாவலந்தீவு) ஒன்று இருந்ததென்றும் அதன் மத்தியில் மேருவும் அதனைச் சூழ்ந்து இளாவிருதமும் உள்ளதென்றும், இலங்கைக் தீவு மேருமலையின் ஒரு கொடுமுடி என்றும் புராணங்கள் கூறுகின்றன. இளாவிருதம் என்பதில் விருதம் நாட்டைக் குறிக்கும். இளா என்பது எல் என்பதன் திரிபு. இளா விருதத்தின் பகுதியாகிய இலங்கை ஈழமென வழங்குகின்றது. ஈழம் என்பதன் அடி எல் என்றே தமிழ் ஒப்பியல் அகராதியில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் காட்டியுள்ளார்கள். எல்லம் என்பது இலங்கையின் பழைய பெயர். இலங்கை என்னும் சொல்லின் அடியும் எல். இலங்கை மக்களின் பழைய மொழி எலு என வழங்கிற்று. இதனாலும் இலங்கையின் பழைய பெயர் எல் அல்லது எல்லம் என நன்கு துணிதும். இலங்கையை ஆண்ட முதல் அரசன் சிங்கமரபினன். ஆகவே எல்லம் சிங்க எல்லம் எனப் பெயர் பெற்றது. மக்கள் சிங்க எல்லர் என்று அறியப்பட்டனர். |