பக்கம் எண் :

268தமிழ் இந்தியா

நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமுமென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்தெண்ணூற் றைம்பதிற்றியாண்டு என்ப, அவர்களைச் சங்க மிரீஇயினார், கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப." (இறையனார் களவியல் உரை.)

  இதன் சுருக்கம்:-தலைச்சங்கம் கடல்கொண்ட தென் மதுரையிற் கூடிற்று. இக்கழகத்துக்கு வரையறுக்கப்பட்ட உறுப்பினர் 549-பேர். இச்சங்கம் 89 பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் 4,440 ஆண்டு நடைபெற்றது. இச்சங்கத்தில் நூல்களையோ தனிப்பாடல்களையோ பாடிக்கொண்டு வந்து அரங்கேற்றிய புலவர் 4,449 பேர். இடைச்சங்கம், தென்மதுரையின் அழிவுக்குப்பின் கபாடபுரத்தில் நடைபெற்றது. இச்சங்க உறுப்பினர் 59-பேர். இச்சங்கம் 59 பாண்டியர் ஆட்சியில் 3,780 ஆண்டு நடைபெற்றது. இச்சபையில் பாடல்களை அரங்கேற்றிய புலவர் 3,700 பேர். இவர்களுள் ஐவர் பாண்டியமன்னர்.

   கபாடபுரத் தைக் கடல் கொண்டபின் சங்கம் மதுரையிற் கூடிற்று. இச்சங்கம் 49 அரசர் காலத்தில் 1800 ஆண்டு நடைபெற்றது. இச் சங்கத்துப், புலமையில் அரங்கேறிய புலவரின் எண் 449. இவருள் மூவர் பாண்டியர். இச்சங்க உறுப்பினர் 49 பேர்.

இச்சங்கம் 197 அரசர் காலத்தில் 9,990 ஆண்டுகள் நடைபெற்றிருக்கின்றது.