பக்கம் எண் :

தமிழ் இந்தியா269

சங்க ஆராய்ச்சி

  இறையனார் களவியலுரைகாரர் இச் சங்க வரலாற்றை அக்கால நூல்களில் கண்டவற்றை ஆதாரமாகக் கொண்டே எழுதியுள்ளார் என உய்த்துணர்தல் வேண்டும். இவ்வகை வரலாறுகள் பல, ஆங்காங்கு அக்கால நூல்களிற் காணப்பட்டன என்பதற்கு, "சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கலகத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னும்" என்று பேராசிரியரும், கடல்கொண்ட ஆறும் மலையும் நாடும் ஆகியவற்றை அடியார்க்கு நல்லாரும், "வடிவே லெறிந்த வான் பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்று இளங்கோவடிகளும், "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மெற்சென்று மேவார்நா டிடம்படப், புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினால் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்" என நல்லந்துவனாரும் கூறுமாற்றான் நன்கு துணியப்படும்: தமிழ் மக்கள் தம் வரலாறுகளை எழுதிவைப்பதில் கருத்துக் செலுத்திற்றிலர் எனக் கூறுவது தவறு. தமிழர் தம் பண்டை வரலாறுகளையும் அரசர்களையும் பற்றி எழுதிவைத்திருந்தார்கள் என்பது மகஸ்தீனஸ், பக்கஸ் முதல் அலக்சாந்தரின் படையெடுப்பு வரையில் 154 பாண்டியர் ஆண்டார்கள் என்றும், அவர்களின் ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் கூறியுள்ளமையால்1 நன்கு துணிதலாகும்.


1. பாண்டியர்கள் தமது பரம்பரை சிவனினின்று தோன்றிய தெனக் கொண்டார்களெனத் தெரிகின்றது. கிரேக்கர் சிவனையே பக்கஸ் எனக் கூறியுள்ளார்கள் எனச் சில வரலாற்றுக்காரர் கூறியுள்ளார்கள். எகிப்தியரும் தமது நாட்டை மிக முற்காலத்து ஆண்டவர்கள் கடவுளர் என நம்பினர். திருவிளையாடல் கூறும் பாண்டிய அரச பரம்பரையும் ஈண்டு நோக்கத்தக்கது.