பக்கம் எண் :

தமிழ் இந்தியா279

ஸ்கிதிய மக்களும் தமிழரை ஒப்பத் துரானியமக்களாவர் என மக்கட்குல நூலார் கூறுவர்.
 

தொல்காப்பியர்

   தொல்காப்பியர் என்பது தொல்காப்பியம் என்னும் நூலைச் செய்த ஆசிரியருக்கு அந்நூல் செய்தமை காரணமாக வழங்கப்பட்ட ஒரு காரணப்பெயர். இது நன்னூல் செய்தாரை நன்னூலார் எனக் கூறுதல் போன்றதோர் வழக்கு. இவரது இயற்பெயர் யாதெனத் தெரியவில்லை. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவர் இயற்பெயர் திரணதூமாக்கினி என ஓரிடத்துக்குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியரின் இயற்பெயர் புலத்தியன் (புலம்-அறிவு) என்றும், அப்பெயரை வடமொழிப்படுத்தியவர்கள் அதனைப் புல் + அகம் + தீயன் எனப் பிரித்துத் (திரணம் + தூமம் + அக்கினி) திரண தூமாக்கினி என மாற்றினரென்றும் அறிஞர் சிலர் கூறுவர். இது இக்காலம் வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தி வழங்குவதுபோன்றதோர் முற்கால வழக்கு. சூரியநாராயண சாத்திரி என்பதைப் பரிதிமால் கலைஞன் என்று வழங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வடமொழியினைத் தெய்வமொழி என மக்கள் நம்பத் தலைப்பட்ட ஒருகாலத்தில் தென்னாட்டுத் திருக்கோயிற் பெயர்களும் மக்கட் பெயர்களும் வடமொழியிற் றிருப்பப்பட்டு வழங்கலாயின. திருவிளையாடற் புராணத்திற் காணப்படும் பாண்டிய அரசர்கள் பெயர்களும் இவ்வாறு மாற்றப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது. தொல்காப்பியம் செய்யப்பட்டகாலத்தில் திரணதூமாக்கினி போன்ற பெயர் தோன்றியிருத்தல் சாலாதென்பது வரலாற்றாசிரியர்களுக்கு நன்கு தெளிவாகும்.