தொல்காப்பியம் என்னும் நூலை நுணுகி ஆராயுமிடத்து அது பண்டைத் தமிழ் மரபுகளைப் பாதுகாத்தற்கு எழுந்த நூலென்பது தெள்ளிதிற் புலப்படும். இக்காரணம் பற்றியே தொல்காப்பியம் (தொல்+காப்பு+இயம்= பழமையைக் காப்பதாகிய நூல்) என்னும் பெயர் அந்நூலுக்கு இடப்பட்டது. காப்பியம் என்பது காவியம் என்பதன் திரிபு எனச் சிலர் வழக்கிடுவர். தொல்காப்பியத்தில் காவியத்துக்குரிய பொருள்கள் அமைந்திராமையின் அன்னோர் கூற்றுப் பொருளன்றென விடுக. தொல்காப்பியம் கி. மு. 350-க்குப் பிற்பட்ட நூலன்றென்பது வரலாற்றாசிரியர்கள் துணிபு. தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ள ஓரை என்னும் சொல் கிரேக்கரின் "ஹோரா" என்னும் சொல்லின் திரிபென்றும், வராகமிகிரர் (கி. பி. 550) காலத்துக்குப் பின்பே இந்திய மக்கள் ஹோரா என்னுஞ் சொல்லை வழங்கினார்களென்றும், ஆகவே, தொல்காப்பியம் கி. பி. 6-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தென்றும் சிலர் கூறுவர். தொல்காப்பியத்திற் கூறப்படும் இலக்கணவிதிகளால் அது சிலப்பதிகாரத்துக்கு முற்பட்ட நூல் என நன்கு விளங்குகின்றது. கிரேக்கர் கி. மு. 5-ம் நூற்றாண்டுக்குமுன் வான நூலைப்பற்றி அறிந்திலர். அதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னரே மேற்கு ஆசியமக்களும் தமிழரும் வானநூல், சோதிடநூல் என்பவைகளில் திறமைபெற்று விளங்கினர். ஆகவே, கிரேக்கமக்கள் வான ஆராய்ச்சி, சோதிடம் என்பவைகளுக்குரிய சொற்களைப் பிற மக்களிடமிருந்து பெற்றிருப்பார்களேயன்றி அக் கலைகளை பழமையே அறிந்திருந்த பிறர் கிரேக்கரிடமிருந்து பெற்றிருக்கமாட்டார்கள். உலக மொழிகளில் தமிழ்ச்சொல் மூலங்கள் சென்று வழங்குவதை மொழி ஆராய்ச்சியாளர் கண்டு கூறுகின்றனர். கற்களை |