எண்ணிக் கணக்கிடுதல் என்னும் பொருளில், லத்தீன் மொழியில் வழங்.கும் கல்குலஸ் (Calculus) , ஆங்கில மொழியில் வழங்கும் கல்குலேட் (Culculute) முதலிய சொற்கள் கல் என்னும் தமிழ்ச்சொல்லினின்று பிறந்தனவாதலை நோக்குவார்க்கு ஓரை என்னும் சொல்லே கிரேக்க மொழியில் சென்று ஹோரா என்று வழங்கிற்றெனக் கொள்ளுதல் இயைபுடையதெனத் தோன்றும். தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனக் கூறப்படுதலின் அவர் ஐந்திரமென்னும் வடமொழி இலக்கணத்தைக் கற்றிருந்தார் எனச் சிலர் கருதுவர். ஐந்திரம் என்னும் இலக்கணநூல் இப்பொழுது காணப்படவில்லை. பாணினிக்கு முன் ஐந்திரமென்னும் வடமொழி இலக்கணமொன்று இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாணினிக்குப்பின் ஐந்திரமென்னும் இலக்கணநூல் வழங்கவில்லை. பாயிரத்திற் கூறப்பட்ட ஐந்திரம் வடமொழி நூலாயின் தொல்காப்பியர் பாணினி முனிவருக்கு (கி. மு. 400) முந்தியராவர். ஒரு மொழிக்கு இலக்கணஞ் செய்யுமிடத்து மற்றொரு மொழிக்குரிய இலக்கணத்தையும் கற்று ஒப்புநோக்கி ஒற்றுமை வேற்றுமை காணுதல் சிறந்த முறையாகும். இன்னொருசாரார், ஐந்திரமென்பது சைனநூல்; ஆகவே, தொல்காப்பியர் சைனர் எனக் கூறுவர். சிலப்பதிகாரத்தில்,1 "கப்பத்திந்திரன் காட்டிய நூலின், மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணா" "விண்ணவர் கோமான் விழுநூல்" என இந்திரனால் செய்யப்பட்ட ஒரு நூல் சுட்டப்படுகின்றது. அது மிகப் பழையகாலத்து (கற்பகாலத்தில்) இந்திரனாற் செய்யப்பட்டதெனப்படுகின்றது. 1. கப்பம் என்பது கற்பம் என்பதன் திரிபு. |