இருதிணை வினைமுற்றுக்களுடனும் பயன்படுத்தப்பட்டன. தொல்காப்பியர் உயர்திணை என்று கொண்ட தன்மைப் பெயர்கள் நன்னூலார் காலம் முதல் விரவுதிணை (உயர்திணையும் அஃறிணையும்) எனக் கொள்ளப்பட்டன. "தன்மை நான்கும் முன்னிலை யைந்தும்..........பொதுப்பெயர்" (நன். 282) செய்யும் என்னும் முற்று நிகழ்காலத்துக்கு மாத்திரம் உரியதெனத் தொல்காப்பியங் கூறுகின்றது. "பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்து, செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா"(தொல், சொல், வினை.) நன்னூலாரின் படிஅது வருங்காலத்துக்கு முரியதாகும். "செய்யு நிகழ் பெதிர்வும்" (நன்.145) நன்னூலார் நிகழ்கால வினைமுற்று செய்கிறேன், செய்கின்றேன், செய்யாநின்றேன் என வரும் எனக் கொள்வர். தேவாரத்துக்கும் நாலாயிரப் பிரபந்தத்துக்கும் முன் மேற்குறித்தவைகளில் ஒன்றேனும் ஆளப்படவில்லை. வீரசோழிய ஆசிரியர் செய்யாநின்றேன் என்பதைச் செய்யா-நின்றேன் என இரு சொற்களாகப் பிரிப்பர். ஆனால், நன்னூலார் இரு சொற்களையும் ஒன்றாகக்கொண்டு ஆநின்று நிகழ்காலத்திணை உணர்த்துமென்றார். இவ்வாராய்ச்சியினால் தொல்காப்பியம் எல்லாத் தமிழ் இலக்கண நூல்களுக்கும் பார்க்க முற்பட்டதென்பதும், அது சிலப்பதிகார காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதென்பதும் நன்கு விளங்குகின்றன. உரை நடை வரலாறு மொழி, வழக்கு செய்யுள் என இருதிறப்படும். மக்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுங்கால் ஆளும் நடை வழக்கெனப்படும். வழக்கெனினும், வசன நடை உரை நடை எனினும் ஒக்கும். |