உள்ளத்தெழும் உணர்ச்சிகளுக்கேற்ப மக்களாற்றோற்றுவிக்கப்படும் ஓசைகளின் வளர்ச்சியே பாடலின் தொடக்கமாகும். அவ்வோசை, அளந்து செய்யப்பட்டமையின் செய்யுள் எனப்பட்டது. செய்யுள் என்பதற்குச் செய்யப்பட்ட தென்பது பொருள்; தூக்கு என்பது செய்யுளுக்கு மற்றொரு பெயர். தூக்கு என்பது அளவு என்னும் பொருட்டு. ஆகவே, தூக்கு, செய்யுள் என்னுஞ் சொற்கள் ஒரே பொருளனவாதல் காண்க. பா என்பதும் செய்யுளை உணரத்தும். ஓசை தொடர்பாகச் செய்யுட்குப் பா என்று பெயர் இடப்பட்டுள்ளது. "பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோரோசை" எனப் பேராசிரியர் பா வென்பதற்குப் பொருள் விரித்துரைத்தார். முற்காலமக்கள் உரையாடும்போதும் எழுதும் போதும் ஆண்ட நடைகள் வெவ்வேறு வகையின. பேச்சு நடை எப்பொழுதும் வசன நடையாக அமைவுற்றது. எழுதுங்கால் எப்பொழுதும் செய்யுள் நடையே கையாளப்பட்டது. இதற்குக் காரணம் பல ஆகலாம். செய்யுள் நடை மிகவுஞ் சுருக்கமானது; வசன நடையில் அதிகம் கூற வேண்டியவற்றைச் செய்யுள்முறையிற் சில வரிகளிற் கூறிவிடலாம். ஓலையில் எழுத்தாணியால் எழுதவேண்டியிருந்தகாலத்தில் இச் சுருக்கு முறையை மக்கள் விரும்புதல் இயல்பாகும். அச்சுச்சாதனமில்லாத முற்காலத்தில் நூல்கள் எழுதப்படற்கும், படிஎடுத்தற்கும் செய்யுள் முறை வாய்ப்பளித்தது. |