இக்காரணங்களினாலேயே முற்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிற் காணப்படுகின்றன. காலத்துக்குக்காலம் மக்கள் ஆளும் சொற்கள் மாறுபடுகின்றன. ஒரு காலத்திற் பெரு வழக்கிலிருந்த சொற்கள் மறைந்துபோகப் புதிய சொற்கள் வழக்கில் வருகின்றன. புதிய சொற்கள் வழக்கில் வந்தகாலத்தில் எழுதப்படும் நூல்களில் பழைய சொற்களின் வழக்குப் பெரும்பாலும் நின்றுவிடுகின்றது. பிற்காலத்தவர்களுக்கு முற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பயின்று பொருள் விளங்குவது கடுமையாகின்றது. இக்காரணத்தால் முற்கால நூல்களுக்கு வழக்கு (வசன) முறையில் பொருள் எழுதப்படுகின்றது. இவ்வாறு எழுதப்படும் பொருட்பகுதிகள் உரை என வழங்கும். உரை எழுதும் இம்முறையிலிருந்தே பிற்காலத்தில் வசன நூல்கள் எழுதப்படலாயின. உரைநடைக்கு அடிவரையறை முதலியன இல்லை. முற்கால உரையாசிரியர்களின் உரைநடைகளின் பல பகுதிகள் செய்யுட்கள்போலவே செல்கின்றன. அக்கால மக்களின் வழக்கு எனப்பட்ட பேச்சுநடை, அவ்வாறு இருந்ததெனக் கூறுதல் அமையாது. அவ்வுரையைப் பார்த்து அக்கால உரைநடை எவ்வகையினதென ஒருவாறு சிந்தனைசெய்து அறிந்துகொள்ளலாம். தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கண நூல் கி. மு. 350-வரையிற் செய்யப்பட்டது. அந்நூல் உரை நூல்களைப்பற்றிச் சிறிது கூறுகின்றது. (சூ. 485) அவை பாட்டுக்களின் இடையிடையே உரைநடையினியன்ற பகுதிகள் வைத்துச் செய்யப்படுவன; சூத்திரத்துக்குப் பொருள் எழுதுவன போல்வன; ஒழிந்துபோன பாடல்களுக்குப் பொருள் |