ஒப்ப குமரி முதல் இமயம் வரையில் பரந்து கிடந்த தமிழ் நாட்டைப் பிறமொழிகள் கவர்ந்துகொள்ள இன்று தமிழ் இந்தியக் குடாநாட்டின் சிறியவெல்லையுள் மாத்திரம், வழங்குகின்றது. அதன் ஓரங்களையும் அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு கன்னடம் ஹிந்தி முதலிய மொழிகள் சிறிது சிறிதாகக் கவர்ந்து வருகின்றன. இன்று திராவிட மொழிகளை வழங்கும் மக்களின் எண் 63,000,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ் வழங்குவோரின் எண் 19,000,000. இயல்-2 ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம் இன்று இந்திய மக்களிடையே காணப்படும் பழக்க வழக்கங்களும் பிறவும் பழைய தமிழர் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டனவென்று கருதப்படுகின்றன. சங்க காலத் தமிழர் நாகரிகம் கலப்பில்லாத பழந்தமிழ் நாகரிகமேயாகும். ஒரு மொழியிலுள்ள பழைய சொற்கள் அம்மொழிக்குரிய மக்களின் பழைய நாகரிகத்தை நன்கு விளக்குவன. அரப்பா மகஞ்சொதரோ என்னுமிடங்களிற் காணப்பட்ட பழம்பொருள்களைக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு பழைய சொல்லும் ஒவ்வொரு பழம்பொருளுக்கு நேர். பாரை என்னும் சொல் கல்லால் செய்யப்பட்ட கிண்டும் கருவியைக் குறித்தது. அப்பெயரே இன்று இரும்பு முதலிய உலோகங்களாற் செய்யப்பட்ட அவ்வகைக் கருவியைக் குறிக்க வழங்குகின்றது. உலோகத்தைப்பற்றி அறிய முன் மக்கள் கல்லாற் செய்த பாதையைப் பயன்படுத்தினார்கள் எனப் பாரை |