வழக்கமாக இன்றும் நிலவுகின்றது; மற்றைய நாடுகளில் கூறை கொடுக்கும் வழக்கமாக நிலைபெறுகின்றது. மகளிர் மூங்கிலை வார்ந்து கூடை முடைந்தனர். இத்தொழில் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றது. அவர்களின் குலதெய்வம் முருகன். முருகக்கடவுள் ஆதிகாலம் முதல் மலை உச்சிகளில் வைத்து வணங்கப்பட்டார். முருக வழி பாட்டிற்குரிய ஆடல் வேலன் ஆடல் அல்லது வெறியாட்டு எனப்படும். முருக வழிபாட்டிற்குரிய இவ்வாடல் முருக பூசை செய்வோனால் ஆடப்பட்டது. முருகக் கடவுளைப் போல வேலைக் கையில் வைத்திருத்தலால் அவனும் வேலன் எனப்பட்டான். திருமுருகாற்றுப்படை என்னும் சங்க நூலில் குறமாது முருகவழிபாடு செய்யும் முறை நன்கு கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: மலையிடத்துள்ள அகன்ற நகரிடத்தே குறமாது கோழிக்கொடியை நட்டு அதற்கு நெய்யும் வெண் சிறு கடுகும் அப்புவாள்; வழிபாட்டிற்குரிய மந்திரங்களை உச்சரித்து அழகிய மலர்களைக் தூவுவாள்; மாறுபட்ட இரண்டு நிறமுடைய பட்டாடைகளை உள்ளொன்றும் புறம் பொன்றுமாக உடுப்பாள்; சிவந்த நூலைக் காப்பாகத் கையிற் கட்டுவாள்; வெண்பொரிகளைத் தூவுவாள்; இரத்தத்தோடு கலந்த வெள்ளரிசியைப் பலியாக இடுவாள்; செவ்வலரி மாலைகளையும் பிற மாலைகளையும் ஒரே அளவாக நறுக்கி அசையும்படி தூக்குவாள்; மலைப்பக்கத்தே உள்ள ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் வருத்தாதொழிக என வாழ்த்தி நறிய தூபங்காட்டுவாள்; மலையிடத்து வீழ்கின்ற அருவியோடு வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கச் சிவந்த மலர்மாலைகளைத்தூவி உதிர மளைந்த தினையைப் பரப்பி முருகக்கடவுள் மகிழும்படி வழிபாடு செய்வாள். |