முருகனாற் குறைநேர்ந்த பெண்களுக்கு முருகபூசை செய்யும் வேலன் வெறியாடி ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அவ்விரத்தத்தைத் தொட்டு அவன் நெந்றியிற் றடவுவதும் வழக்கு. குறிஞ்சி நிலத்தைப்பற்றியும் அந் நிலமக்களைப் பற்றியும் சங்கநூல் களிற் காணப்படுவன சில வருமாறு:- 1மலையிடத்தே பலாவும் வாழையும் செழித்துவளரும். குறவரின் வீடுகள் புல்லால் வேய்ந்த சிறு குடிசைகள். வீட்டின் முற்றத்தே வேங்கைமரமும் பலாவும் நிற்கும். குறவர் அம்மரங்களின் கீழ் இருந்து தேட்கடுப்புப்போன்ற நாட்பட்ட கள்ளைக் குடித்து, சந்தனக்கட்டை விறகாற் சுட்ட இறைச்சியை யுண்டு மகளிரோடு குரவையாடுவர். மலை முகடுகளிலே தேன் கூடுகள் தொங்கும். குறவர் உயர்ந்த மூங்கில் ஏணிகளைச் சார்த்தி ஏறி அத் தேன்கூடுகளை அழித்துத் தேன் கொள்வர். இராக்காலத்தே வேட்டையாடச் சென்ற குறவன் பகற்காலத்திற் புலித்தோல்மீது படுத்து உறங்குவான். கள்ளைஉண்ட குறவன் இராக்காலத்தே பரண்மீதிருந்து தினைப்புனத்தைக் காவல் காக்கக், குறத்தி சந்தனம்பூசிய தனது கூந்தலைத்துளர்ந்து ஆற்றிக் குறிஞ்சிப் பண்பாடுவாள். தினைப்புனத்தை மேயவந்த யானை அவ்வோனாயைக் கேட்டு மெய்மறந்து தூங்கும். தினைப்புனத்தை மேயவரும் பன்றி, குறவன் பரண்மீது மாட்டிய கொள்ளியைக் கண்டுநிற்கும். குறச் சிறுமியர் கையிற் சங்குவளை2 யணிந்து 1. அகம் 2. வளை என்னும் சொல் சங்கை உணர்த்தும். சங்கை அறுத்துச் செய்யப்பட்ட வளையமும் வளை வனப்பட்டது. இதனை ஆதிகால மக்கள் கையில் அணிந்தனர். இவ்வளை பேய்பிசாசுகளினின்றும் மக்களைக் காக்கின்றது என்னும் நம்பிக்கை முற்காலத்தில் உண்டாயிற்று. ஆகவே வளைக்குக் காப்பு என்னும் இன்னொரு பெயர் உண்டாயிற்று. இன்றும் நாட்டுப்புறங்களில் குழந்தைகளின் கைகளில் காப்பாகச் சங்கு வளைகள் இடப்படுகின்றன: இன்றேல் சங்குமோதிரங்கள் கட்டப்படுகின்றன. பொன்னாலும் உலோகங்களாலும் செய்த வளைகள் பிற்காலத்திற் பயன்படுத்தப்பட்டன. அவையும் வளை காப்பு என்னும் பெயரால் வழங்கும். தோடு காதோலை, சரடு போன்ற அணி வகைகள் ஒவ்வொன்றும் ஆதிகால மக்களின் வரலாற்றை உணர்த்துவன. |