பக்கம் எண் :

48தமிழ் இந்தியா

முதுகிற் றூங்கும்படி கூந்தலைப் பின்னி விடுவர்; தினைமீது விழும் கிளிகளத் தட்டை குளிரி முதலிய கருவிகளைத் தட்டியும், அசோகந் தளிரை ஓச்சியும், ஆயோ எனச் சத்தமிட்டும் ஓட்டுவர்; அசோகிலும் தாழையிலும் கட்டிய ஊசல்களில் ஏறியாடுவர்; வேங்கைப் பூவைக் கொய்து புலிபுலியெனச் சத்தமிடுவர். சிறுமிக்குத் தெய்வத்தால் நேர்ந்த குறையைப் போக்க அன்னை பூக்களைப் பலியாகத் தூவி வீட்டைக் காவல் செய்து வெறியாடும்பொருட்டு முருக பூசை செய்வோனை வீட்டுக்கு அழைப்பாள். பலாப் பழத்தாற் சமைத்த கள்ளைக் குறத்தியர் வார்க்க வார்க்கக் குறவர் வாங்கி உண்டு மகிழ்வர். யானைகளின் கொம்பைப் பெறுதற்குக் குறவர் யானைகளை வேட்டையாடுவர். மின் மினி மொய்த்திருக்கும் புற்றைக் கரடி இராக்காலத்தே இருந்து தோண்டும்;  அக்காட்சி கொல்லன் இரும்பில் வேலை செய்வது போன்றது. யானையை வேட்டையாடப் புலி பதுங்கியிருக்கும். பிறைபோன்ற கொம்புடைய பன்றி பறைக்கண் போன்று நிறைந்த சுனையிடத்தே நீரைப் பருகிச் சேம்பின் கிழங்கை உண்ணும். சிவந்த ஆரமுடைய கிளி, பறித்துத் தூக்கமாட்டாது போகட்டுச் சென்ற சாமைக்கதிரைக் கோழிகள் நின்று உண்ணும். முற்றிவினையும்படி கள் மூங்கிற் குழாய்களில் வைக்கப்பட்டிருக்கும். குறவர் கடப்பமரத்திற் கொடிகட்டி மாலை தூக்கிப் பலவகை வாத்தியங்களை ஒலித்துக் கூத்தாடி முருகனை வழிபடுவர்.