பக்கம் எண் :

தமிழ் இந்தியா5

கிழக்கு மேற்காகப் பிரிக்கும் முகடுபோலமைந்திருந்தது. ஆதலினாலேயே இந்தியாவின் ஆறுகள் அராபிக்கடலை நோக்கி உற்பத்தியாகி வங்காளக் குடாக்கடலுள் வீழ்கின்றன. வடக்கே இரேதேக 1 கடல் மத்திய ஐரோப்பா சின்ன ஆசியா முதலிய நாடுகளை மூடிப் பரந்து கிடந்தது. இந்தியாவிலே அராவலி மலைகள் மாத்திரம் கடலைப்பார்த்து நின்றன. நீண்ட காலத்தின்பின் மலை (இமயம்) எழ ஆரம்பித்தது. இரெதேக் கடல் மேற்கு நோக்கிப் பின்வாங்கிற்று 2 ," விஞ்ஞானத்தின் சுருக்கம் என்னும் நூலில் கொந்வானாக் கண்டத்தைப்பற்றி அதிசயப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:

  "ஐரோப்பாவில் நிலக்கரி உண்டாயிருக்கின்ற காலத்தில் ஆஸ்திரேலியா தென்னமெரிக்கா இந்தியா முதலிய இடங்களில் ஒரேவகைத் தாவரங்கள் வளர்ந்தன. ஆதலினால் இந்நிலங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொந்வானாக் கண்டமாக விளங்கின" என்று முடிவுசெய்யப்படுகின்றது. 3 பேராசிரியர் வெசினர் 4 புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்: அவர் கூறுவது, "இக்கண்டங்கள் ஒன்றுக்கொன்று அண்மையில் இருந்தன. அண்டாட்டிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா முதலிய நாடுகளைத் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிப் பொருத்தி வைக்கலாம். கடலின் அடியிலுள்ள கருங்கற்பாறை வெடித்தமையால் இக்கண்டங்கள் விடுபட்டுப் பனிக்கட்டி தண்ணீரில் மிதந்து செல்வதுபோல அகன்று சென்றுள்ளன. இது நிலநூலார் கூறும் 5ஐந்தாவது உகத்தில் நிகழ்ந்தது." என்பதாகும்.


1. Tethys.
2. Hindu Civilization P. 7, Radha Kumud Mookerji.
3. Outlines of Science P. 641 - Prof. Arthur Thompson.
4. Prof wegener. 5. Tertiary epoch.