அரசு ஊழியம் புரியும் கணக்கரும் சேவகரும் பலர் கடமை புரிந்தனர். கடற்கரைத் துறைமுகங்களில் வாணிகம் வளர்ச்சியடைந்தது. அங்கு வணிகர் கூடினர். பெரிய மாளிகைகள் எழுந்தன. வண்டிகள் செல்வதற்கு நல்ல வீதிகள் அமைக்கப்பட்டன. மாளிகைகள் குன்று நிமிர்ந்தது போன்ற உயரமுடையன வாகவும் பல சாளரங்களோடு கூடிய மாடிகளும் ஓடு கற்றை முதலியவற்றால் வேயப்படாது மூடு சாந்திட்டு நிலாமுற்றங்கள் விடப்பட்டனவாயு மிருந்தன. அவை வேயா மாடம் எனப்பட்டன. சாளரங்கள் மானின் கண்போன்றனவாகச் செய்யப்பட்டிருந்தன. கடலிற் செல்லும் மரக்கலங்கள் திசையை அறியும்பொருட்டு உயர்ந்த கட்டிடங்களில் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் கலங்கரை விளக்கங்கள் எனப்பட்டன. இக் கலங்கரை விளக்கங்கள் அலக்சாந்திரியாவில் தாலமிசோதர 1 அமைத்த வெளிச்சவீட்டுக்குப் பன்னெடுங்காலம் முற்பட்டது. கப்பலோட்டும் மாலுமி மீகான் எனப்பட்டான். மீகான் என்பதே மீகாமன் எனத் திரிந்து வழங்கும். சங்க நூல்களில் நெய்தல் நிலத்தைப் பற்றியும் அந் நிலமக்களைப் பற்றியும் காணப்படுவன சில வருமாறு: குறச் சிறுமியர் புன்னை நிழலிலிருந்து கருவாட்டைக் காவல் காத்துப் புள்ளோப்புவர். உமணர் எருதுகள் பூட்டிய வண்டிகளில் உப்பையேற்றிச் சென்று விற்பர். பனைமரங்களில் இராக்காலத்தே அன்றிற் பறவைகள் தங்கும். இரவில் மீன்பிடிக்கும் பரதவரின் திமில் விளக்குப் பாசறையில் உறையும் அரசரது யானைமுகத்து நெற்றிப்பட்டம்போல் விளங்கித்தோன்றும். நாவாய் 1. Ptolemy - ( B.C. 283- died .) |