பக்கம் எண் :

56தமிழ் இந்தியா

கூறப்பட்டன. கொலுவிருக்கை கொடி துகில் தோகை பூ இலைகளால் அலங்கரிக்கப்பட்டது. அரசன் வட்டித்த கூர்நுதி முடியணிந்தான். அரசரும் வள்ளல்களும் முகத்தை மழித்திருந்தார்கள். அரசன் அரையில் தங்கப்பட்டிகையும், கையில் கடகமும், கமக்கட்டுக்கும் முழங்கைக்கு மிடையில் சதங்கைகளையுடைய கழலும், கழுத்தில் பவள முத்துமாலைகளும், காலில் வீரச்செயல் பொறித்த வீர தண்டையும், காதிற் குண்டலங்களும் அணிந்திருந்தான். அவன் கொலுவிருக்கும் ஆசனம் கட்டில் எனப்பட்டது. அரசன் சாய்வதற்கு அரியணையிருந்தது. அவனைச் சூழ்ந்து அடியார், உழையர், புகழ்கூறும் அகவர், கட்டளைகளை வெளிப்படுத்தும் வள்ளுவர், அரசனது வீரம் கொடை ஆகியவற்றைப் பாடும்புலவர், அண்ணல், வள்ளல் முதலிய பெருமக்கள் இருந்தனர். அரசன் குடிமக்களின் குறைகளை நேரிற் கேட்டு முறை செய்தான். அவன் பரிசனர் புடை சூழ வீற்றிருந்தான். அரி, கவரி, குயவு, கூவிரம், திகிரி, வையம் என்பன தேரின் பெயர்கள். ஆகவே, அக் காலத்துப் பலவகைத் தேர்கள் இருந்தனவென்று தெரிகிறது. தேர்கள் யானை அல்லது எருதுகளால் இழுக்கப்பட்டன. தேரின் நடுப்பாகம் தட்டு அல்லது நாப்பண் என்றும், அதன் தட்டுப் பார் என்றும், தேரைச் சுற்றியுள்ள பலகைகள் கிடுகு என்றும், சில்லு ஆர் என்றும், தேரின்மீது ஏறுதற்கு அமைக்கப்பட்ட படிகளோடு கூடிய மேடை, முட்டி அல்லது விரம்பு என்றும் வழங்கின. தேர் ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டது. அரச வருவாய் அரசனுக்குரிய நிலங்களால் மாத்திரமன்று. வரி, சுங்கம், திறை, கப்பம் முதலியவைகளாலும் வந்தன.

  ஆட்சி முல்லைநிலத்திற்றோன்றி மருதநிலத்தில் வளர்ச்சியுற்றது. ஆகவே, அரசனது நகர் பெரும்பாலும் மருதநிலத்திலேயே இருந்தது.