பக்கம் எண் :

64தமிழ் இந்தியா

நால்வகைப்படும். குரல், துத்தம், கைக்கிளை உளை இனி விளரிதாரம் என்பன பாடுமிடத்துப் பிறப்பிக்கப்படும் ஏழு தமிழ் இசைகளாகும். ஊதப்படுவனவற்றுள் குழல் முதன்மையுடையது. பனை ஆம்பல் கொன்றை முல்லை முதலிய பலவகைக் குழல்களும் இயங்களும் வழங்கின ஊதப்படும் பெரிய வாத்தியங்கள் காகளம், அம்மியம், சின்னம், கொம்பு, கோடு இரலை, வயிர் என்பன.

  நரம்புக் கருவிகளில் முதன்மையுடையது யாழ். ஒவ்வொரு நிலத்தும் ஒவ்வொரு வகை யாழ் வழங்கிற்று. நாலுமுதல் பதினான்கு பதினேழு இருபத்தொரு நரம்புகளையுடைய யாழ்கள் வழக்கில் இருந்தன. இவை கை விரல்களினால் தடவியும் தெறித்தும் வாசிக்கப்பட்டன. பழைய யாழ்கள் உருத்திர வீணை போன்ற வடிவினவாய் மேல் நாடுகளில் வழங்கிய காப் (Harp) என்னும் யாழ் போன்று நரம்பு கட்டப்பட்டன என்று கருதலாம். இவ்வகை யாழ்கள் பழைய எகிப்தில் வழக்கிலிருந்தன. காப் போன்ற யாழ்கள் பழைய சுமேரியராலும் பயன் படுத்தப்பட்டன.

  பறைகள் பலவகையின.1 தடாரி, உடுக்கை முதலியன பாணர் கையில் இருந்தன. தட்டை, கரடிகை என்னும் பறைகள் கரடி கத்தும் ஓசையைப் பிறப்பித்தன. பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்பன அக்காலத்து வழங்கிய பண்கள். இசை நுணுக்கம் பேரிசை சிற்றிசை முதலிய நூல்கள் தமிழிசையிலக்கணங்கூற எழுந்தன என்று பழைய உரைகள் கூறுகின்றன. அந்நூல்கள் இஞ்ஞான்று இறந்துபட்டன. அரசரும் பெருமக்களும் வேட்டையாடுமிடத்து மேற்கூறிய பறைகளைப் பயன்படுத்தினர்.



1. முரசு, பேரிகை, ஆகுளி, சல்லரி, சல்லிகை, கிணை.