பக்கம் எண் :

66தமிழ் இந்தியா

ஞெலிகோல் (நெருப்புண்டாக்குந் தடி), நிறை கோல், கவண்பாய் முதலியன வீட்டுப் பொருள்களிற் சில.

  வறியோர் குடிசைகளிலும் குடில்களிலும் வாழ்ந்தனர். சுவர்கள் தடிகளை நட்டு மண்ணை எறிந்து எடுக்கப்பட்டன. அவை பெரும்பாலும் வட்டமானவை. கூரையின் முகட்டில் கலசம் வைக்கப்பட்டது. இம்முறையைப் பின்பற்றியே ஆலயங்களும் கட்டப்பட்டன. மன்றம் என்னும் பெருந்தெருக்களும், கோணம் என்னும் குறுந் தெருக்களும் இருந்தன. குறிஞ்சிநிலக் கிராமம் சிறுகுடி என்றும், முல்லை நிலக்கிராமம் பாடி, சேரி என்றும், மருத நிலக் கிராமம் ஊர் என்றும், நெய்தல் நிலக் கிராமம் பாக்கம் என்றும், பாலைநிலக் கிராமம் பறந்தலை என்றும் வழங்கப்பட்டன. அவைகளில் கிழோரும் மேலோரும் வாழ்ந்தனர்.


உடை

  பருத்தி இந்தியாவில் விளைவது. பஞ்சிலிருந்து நூலும் நூலிலிருந்து ஆடையும் நெய்யப்பட்டன. நீளமாக நெய்யப்பட்ட ஆடைகள் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டன. ஆகவே அறவை, துண்டு, துணி என்பன ஆடையின் பெயர்களாக வழங்கின. பட்டு, மயிர் என்பவைகளாலும் ஆடை நெய்யப்பட்டது. நூலிழைகள் சென்ற இடமே தெரியாத மெல்லிய ஆடைகள் அக்கால மக்களால் அணியப்பட்டன. பலவகை ஆடைகளும் உடைகளும் அக்காலத்து வழங்கின என்பதற்கு அவைகளைக் குறிக்க வழங்கிய பெயர்களே போதிய சான்று.1 புடைவைகளுக்குப் பலவகைச் சாயங்கள் தோய்க்கப்பட்டன.
 


1. நூல், இழை, சரடு, தொடர், நுவணம், பனுவல், பிசின், பன்னாடை, நெய்யரி, மரவுரி, ஆசினி, இலக்கர், சீரம், சீரை, துகில், அறுவை, துணி, துண்டு, ஆசாரம், ஆசிடை, ஆடை, இடைதல், கலிங்கம், உடுக்கை, உடை, ஏடகம், ஒலியல், கந்தை, கத்தியம், கப்படம், கலை, கடாகம், காழகம், கூறை, கோடி, சம்பரம், சாடி, சிற்றில், சீரை, சூடி, சேலை, தானை, தூசு, தூட்டி, தூரியம், கோடிகம், மிடியல், புடைவை, படாம், பட்டம்.