கரம்பு, பணி, பரணம், பாளிதம் என்பன பட்டாடைகள் சிலவற்றின் பெயர்கள். கம்பளியினாற் செய்யப்பட்ட ஆடைகள் மயிரகம், உயிரகம் எனப்பட்டன. ஆடைகள் அழகிய கரைகளும், பூவேலைப்பாடுகளும், கண்கவர் வனப்பும் உடையனவாயிருந்தன. ஆடவரும் மகளிரும் கிழித்துத் தைக்கப்படாத உடைகளையே பயன்படுத்தினர். ஊசி, இழை, வங்கி, சன்னல், தையல் முதலிய சொற்களால் அக்காலத்தவர் தையற்றொழிலை அறியார் என்று கூறமுடியாது. இறவுக்கை என்பது இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் தமிழ் அரசருக்கு மெய்காப்பாளராக அமர்ந்திருந்த கிரேக்க உரோமன் அணங்குகளால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டது. ஏவலாட்களும் வீரரும் சட்டை இட்டனர். குப்பாயம் தைப்பை மெய்ப்பை என்பன சட்டையின் பெயர்கள். மக்கள் (தலைப்) பாகை குடை செருப்பு மிதியடி முதலியவைகளைப் பயன்படுத்தினர். ஆடை ஆபரண அலங்காரம் தமிழ் மக்கள் உடைகளாலும் ஆபரணங்களாலும் தம்மை நன்கு அலங்கரித்தனர். வீட்டுச்சுவர்களில் அழகிய சித்திரங்கள் வரையப்பட்டன. வீட்டுவாயில்களில் இன்றும் பெண்கள் கோலமிடுவது முற்கால வழக்குப் பற்றியது. செல்வப் பெருமக்கள் இல்லங்களில் வண்ணமகளிர் என வீட்டையும் பெண்களையும் அலங்கரிக்கும் பெண்கள் இருந்தார்கள். வீட்டிற் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் வேலைப்பாடுடையதாகச் செய்யப்பட்டது. வீட்டுக் கதவு நிலை கைமரங்களின் அந்தலை தூண் என்பனவெல்லாம் அழகிய வேலைப்பாடுகளால் அழகு செய்யப்பட்டன. |