பக்கம் எண் :

தமிழ் இந்தியா69

ஒவ்வொரு கருமங்களுக்கும் ஏற்ற வெவ்வேறு பறைகள் ழுழக்கப்பட்டன. மாடு கவரச் செல்வோர் ஏறுகோட்பறையும், வெறியாடுவோர் முருகியமும், திருமணம் கொண்டாடுவோர் மணமுரசும், வேளாண்மை யறுப்போர் நெல்லரிகிணையும், தேரிழுப்போர் தேரோட்டுப் பறையும், அரசனது அல்லது தெய்வத்தின் ஊர்வலத்தை அறிவிப்போர் புறப்பாட்டுப் பறையும், மீன் பிடிக்கச் செல்வோர் மீன்கோட் பறையும், சூறை அடிப்போர், சூறைகோட் பறையும் கொட்டினர். ஒவ்வொரு வாத்தியமும் வெவ்வேறு ஓசையை எழுப்பின.

  கூத்துகள் பல வகையின. களிகுனிப்பு எனப்பட்ட கூத்து, ஒரு பாட்டிலுள்ள பொருளை ஆட்டத்தாலும் சைகைகளாலும் காட்டுதல், இவ்வழக்குப்பற்றிய கோவிற்கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. பரதநாட்டியம் என வழங்குவதும் இதுவே. கூத்த மகளிர், கூத்தியர் எனப்பட்டனர். இப்பெயர் பரந்தையரைத் குறிப்பதாயிருக்கின்றது. சிறுமியர், கும்மி, தெள்ளேணம், சாழல், ஓரை முதலிய ஆடல்கள் புரிந்து களித்தனர். சிறுவர் கிட்டிப்புள் விளையாடினர். இது மேல் நாட்டவரின் சாட்டைப் பந்தடி
(Cricket) விளையாட்டுப் போன்றது.

  பாணர் யாழ் மத்தளம் முதலியவைகளுடன் அலைந்து திரிந்து அரசர், பெருமக்கள் வாயில்களில் பாடினர். வேடர் வலையேற்றி மான் பன்றி முதலிய விலங்குகளைப் பிடித்துப் பொழுதுபோக்கினர். மற்போர் பொதுவான பொழுது போக்குகளில் ஒன்று.

போக்கு வரவு

  அக்கால மக்கள் பலவகை வண்டிகளைப் பயன்படுத்தினர். வண்டி, ஊர்தி, ஒழுகை, சகடு, சாகாடு, வையம் முதலிய பெயர்களால் இது