அறியப்படும். வளையம், வட்டில், வட்டம், வட்டணை, வட்டு, வணங்கு, வணர், வளி, வள்ளம், வள்ளி, அச்சு, ஆணி முதலிய வண்டியின் உறுப்புகளை உணர்த்தும் பெயர்களால் அவர்கள் வண்டியின் பயனை நன்கு அறிந்திருந்தார்களென விளங்குகின்றது. வண்டி பெரும்பாலும் வாணிகத்தின் பொருட்டே பயன்படுத்தப்பட்டது. அரசரும் பெரு மக்களும் தேர்களிலும் பல்லக்குகளிலும் சென்றனர்; நீரிலாயின் ஓடங்களில் சென்றனர்; தோணிகளின் முகப்பு யாளை குதிரை சிங்கம் முதலியவைகளின் தலைகள்போலச் செதுக்கப் பட்டிருந்தது. அக்காலம் பலவகைத் தோணிகள் வழங்கின வென்பதற்குக் கப்பல், ஓடம், அம்பி, தோணி, தெப்பம், பரிசில், படகு, கலம், பஃறி, சதா, போதம், தொள்ளம், பகடு, பட்டிகை, பட்டி, படுவை, புணை, மிதவை, வள்ளம், திமில் முதலிய பெயர்களே சான்று. உணவு தமிழ் மக்கள் ஊனைக் கறியாகவும் தாவர வகைகளையும் தானியங்களையும் முக்கிய உணவாகவுங் கொண்டனர். அவர்கள் இறைச்சியை மிளகுதூள் இட்டு ஆக்கிக் கறியாகப் பயன்படுத்தினர். மிளகாய் பிற்காலத்தில் இந்தியாவோடு வாணிகம் செய்த ஐரோப்பிய மக்களாற் கொண்டுவரப்பட்டது. இது தென்னமெரிக்கப் பயிர். ஆகவே, அதற்கு இடுகுறிப்பெயர் இல்லை. மிரியல், கறி, கலினை, காயம், திரங்கம் முதலிய பெயர்கள் மிளகைக் குறிக்கும். கிரேக்கரும் உரோமரும் இந்தியாவினின்றும் அதிக மிளகைக் கொண்டு சென்றனர். அவர்கள் மிளகைப் பிப்பிலி என வழங்கினர். |