தமிழ்மக்கள், தாளிதக்கறி (குய்), பொரிக்கறி, வறை, துவட்டல், துவை, புளிங்கறி, கரடி, ஊறுகாய் முதலிய பலவகைக் கறிகளை உண்டனர். தமிழ் மக்களின் முக்கிய உணவு நெல். நெல் புழுக்கி உலர்த்திக் குத்தி அரிசியாக்கப்பட்டது. அவ்வாறு குத்தப்பட்ட அரிசி புழுங்கலரிசி எனப்பட்டது. அரிசி சோறாக அட்டு உண்ணப்பட்டது. அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அவிழ், அழுப்பு, உணா, ஊண், உண்கூழ், சதி, சாதம், சொன்றி, சோறு, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர், புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி என்பன சோற்றின் பெயர்கள். ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு வகையாகச் சமைக்கப்பட்ட சோற்றை உணர்த்தலாம். பருப்போடு சேர்த்துப் பொங்கப் பட்டசோறு பொங்கல் எனப்பட்டது. களி, கூழ், துழவை, கஞ்சி, நீராரம், தோசை, அடை முதலியன வெவ்வேறு வகையாகச் சமைக்கப்பட்ட உணவுகளாகும். அப்பம், பிட்டு, அஃகுல்லி, இலையடை, நொலை, மெல்வடை, பொல்லல், இடி, சஃகுல்லி, நுவணை, ஓச்சை, துவை, சீடை, வடை முதலியன பணியார வகையுட்சில. மக்கள் வாழும் இடங்களுக்கு இடம், உண்ணப்படும் தானியங்கள் வேறுபட்டன. முல்லைநிலமக்கள் வரகு, சாமை, முதிரை முதலிய தானியங்களையும், குறிஞ்சி நிலமக்கள் ஐவனம், தினை, மூங்கிலரிசி முதலியவைகளையும், மருதநிலமக்கள் செந்நெல், வெண்ணெல் முதலியவைகளையும், நெய்தல் நிலமக்கள் மீனுக்கும் கருவாட்டுக்கும் மாற்றிய தானியங்களையும் உணவாகக் கொண்டனர். தேனுந் தினைமாவும் சுவையுள்ள உணவாகும். மருத நிலமக்கள் தேனுக்குப் பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சிச் சர்க்கரை கற்கண்டு முதலியவைகளைச் செய்தனர். பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் என்பன |