மக்களால் விரும்பி உண்ணப்பட்டன. பலவகைப் பழங்கள் புசிக்கப்பட்டன. பழந் தமிழர் பலவகை மதுவை அருந்தினர். உப்பு அதிகம் விளைவிக்கப்பட்டது. உப்பு விளையும் வயல்கள் உப்பளம், அளக்கர், உவர்க்களம், கழி எனப்பட்டன. நிலங்கள் நன்செய் புன்செய் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. திருத்தி விளைவிக்கப்படாத நிலம் தரிசு எனப்பட்டது. நன்செய் புன்செய் நிலங்கள் செய் எனப்பட்டன. வயல், அகணி, கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செறு, தடி, பணை, பண்ணை, பழனம், பானல், புலம் முதலியன வயலின் பெயர்கள். பயிர்ச் செய்கை வேள் ஆண்மை எனப்பட்டது.1 வேள் - நிலம்; ஆண்மை-அரசு அல்லது ஆளுந்தன்மை. வேளாண்மை எல்லாத் தொழில்களிலும் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. பெரிய நிலத்தையுடையோர் வேள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் குறுநிலமன்னர்களாகவும் இருந்தனர். வேளாண்மை என்பது தமிழில் கொடை, ஈகை என்பவைகளைக் குறிக்கவும் வழங்கும். வேளாண் மாந்தர் இயல்புகள் பத்து. அவை, ஆணைவழி நிற்றல் (சத்தியம் கடைப் பிடித்தல்), அழிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல் (மற்றவர்களைக் கடமைப்படுத்தல்), கசிவு அகத்துண்மை, ஒக்கல் போற்றல், ஓவாமுயற்சி, மன்னிறை கருதல் (அரசனுக்குச் செல்லவேண்டிய கடமையைச் செலுத்தல்) ஒற்றுமை கோடல், விருந்து புறந்தருதல், திருந்திய ஒழுக்கம் என்பன. வயல்வேலைக்குரிய ஒவ்வொரு தொழிலுக்கும் தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன. கொத்தல், உழக்கல், மிதித்தல், உழுதல் முதலியன நிலத்தைப் பண்படுத்தும் வினைகளின் பெயர்கள். வேளாளனது முக்கிய தொழிற்கருவி கலப்பை. 1. வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளில் வரும் வெள்ளாளரில் வெள் வெள்ளத்தைக் குறிக்கும். |